பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சிறந்த சொற்பொழிவுகள்

ஒரு சக்தியோ தெய்வமோ இருந்திருந்தால் அதைக் காப்பாற்றி இருக்க முடியும். ஒன்றும் இல்லாததை நம்பிக்கொண்டு ஏன் இத்தனை மக்கள் தங்கள் காலத்தையும், சக்தியையும் செல்வத்தையும் வீண் விரையம் செய்ய வேண்டும்?

கடவுள் என்பது கற்பனை என்றும், அதனால் எந்தவிதமான நன்மையும், தீமையும் கிடையாது என்றும் பெரியார் அவர்கள் பல ஆண்டுகளாகக் கூறிக்கொண்டு வருகிறார். அதையே நானும் சொல்லிக்கொண்டு வருகிறேன். இருப்பினும் கோவிலுக்குச் செல்பவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.

சென்ற மாதம் திருப்பதி உண்டியலில் 28 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது. இது எதைக் காட்டுகிறது. கடவுள் இல்லை என்பதை எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் மக்கள் நம்புவதாக இல்லை; வளர்ந்து வரும் மூடநம்பிக்கைகள் இப்படியே வளர்ந்துகொண்டு சென்றால் மக்கள் ஒரு சிலரின் அடிமைகளாகிவிட நேரும். இவ்வளவு தூரம் கல்வி அறிவு வளர்ச்சியடைந்தும், மூடநம்பிக்கையும் வளர்ச்சியடைந்து கொண்டு வருவது மிகவும் வருத்தமாகவே இருக்கிறது.

என்னிடம் வேலைக்கு இருந்த டாக்டர் ப. அ. துரைசாமி (சக்தி தோட்டம், பழனிக் கவுண்டன் புதூர், பன்னிமடை அஞ்சல், கோயமுத்தூர் - 17) என்பவர் அதிகப்படியான மூடப் பழக்க வழக்கங்கள் உள்ளவர். அவர் எந்த ஒரு விஷயத்துக்கும் சோதிட்ரைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார்.

சோதிடர்கள் குதிரைப் பந்தயத்திலும், லாட்டரிச் சீட்டிலும் பணம் வரும் என்று சொல்லிவிட்டார்கள். அதை நம்பிக்கொண்டு அவர் குதிரைப் பந்தயங்கள் நடக்கும் எல்லா இடங்களுக்கும் செல்வார்; எல்லா மாநில லாட்டரிச் சீட்டுக்களையும் விடாமல் வாங்குவார்; இப்படிச் செய்து சில ஆயிரம் ரூபாய்களைத் தொலைத்தார். பின்னர் மற்றவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தொழில் செய்யும்படி ஒரு சோதிடர் சொல்லியதைக் கேட்டுக் கொண்டு சிலருடன் கூட்டுச் சேர்ந்து திட்டமில்லாதபடித் தொழில் செய்து சில ஆயிரம் ரூபாய்களைத் தொலைத்தார்.

குதிரைப் பந்தயமும் வேண்டாம், தொழிலும் வேண்டாம், கல்யாணமாவது செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணிப் பல பெண்களின் ஜாதகத்தை வாங்கி வந்து ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தொடங்கினார்.