பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உள்ளே எட்டிப் பார்த்தார். பிறகு எங்களைப் பார்க்கும்படி அழைத்தார். அபியும் நானும் சன்னல் வழியே கவனித்தோம்.

அறையின் மேற்குச் சுவரில், உயரே கூரை அருகில், வானவெளிச் சாளரங்கள் இரண்டு இருந்தன. அவற்றின் கண்ணாடிப் பரப்பு வழியே சிறிது வெளிச்சம் பரவி அந்த இடத்துக்கு ஒரளவு ஒளி ஊட்டியது. அறைக்குள் நின்றது ஒரு தாவரம் போலவே தோன்றவில்லை. கனத்த பல தும்பிக்கைகள் கொண்ட ஒரு மிருகத்தை ஒத்திருந்தது அது. அந்த மரத்தின் அடிப்பாகம் சுமார் எட்டு அல்லது பத்து அடி உயரத்துக்கு நின்றதை நாங்கள் மெதுவாக உணரமுடிந்தது. உச்சிக்குக் கீழே சுமார் ஒரு அடிதள்ளி, மரத்தைச் சுற்றி தும்பிக்கைகள் முளைத்திருந்தன. அவை ஏழு இருந்ததை நான் எண்ணினேன். அடிமரம் வெளிறி, வழுவழுப்பாய் நெடுகிலும் கபிலநிறப் புள்ளிகள் படர்ந்து காணப்பட்டது. தும்பிக்கைகள் இப்போது முடமாய் உயிரற்றுத் தோன்றின. ஆனால் அவற்றைப் பார்க்கையில் என் முதுகத்தண்டு சில்லிட்டது. அரை குறை வெளிச்சத்துக்கு எங்கள் கண்கள் பழகியபின், இன்னொன்றையும் நாங்கள் கவனித்தோம். அந்த அறையின் தரைநெடுக சிறகுகள் சிதறிக் கிடந்தன.

நாங்கள் எவ்வளவு நேரம் செயல் மறந்து நின்றோம் என நான் அறியேன். இறுதியில் காந்தி பாபு சொன்னார்: "மரம் இப்போது தூங்குகிறது. ஆனாலும் அது விழித்துக் கொள்ளும் நேரம் தான்."

நம்பிக்கையற்ற குரலில் அபி கேட்டான், "உண்மையில் இது ஒரு மரம் இல்லையே; மரம் தானா?"

"அது மண்ணிலிருந்து வளர்வதால் அதை வேறு எப்படிச் சொல்வது? ஆனால் அது ஒரு மரம் போல் நடந்து கொள்வதில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். அதற்கு ஏற்ற பெயர் அகராதியிலேயே இல்லை"

"நீங்கள் எப்படி அழைக்கிறீர்கள்?"

"ஸெப்டோபஸ். வங்காளியில், சப்தபாஷ்-சப்த பாசம்-என்று கூறலாம். பாசம் என்றால் அருள் அல்லது முடிச்சு. நாக பாசம் என்பது போல."

வீடு நோக்கி நடக்கையில், இந்த இனத்தை அவர் எங்கே கண்டு பிடித்தார் என்று கேட்டேன்.

"மத்திய அமெரிக்காவில், நிகரகுவா ஏரி அருகே, அடர்ந்த காடு ஒன்றில்" என்று அவர் சொன்னார்.

"நிரம்ப சிரமப்பட்டுத் தேட வேண்டியிருந்ததா?"

"அந்த வட்டாரத்தில் இது வளர்வதாக நான் அறிந்திருந்தேன், பேராசிரியர் டன்கன் பற்றி நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். பெரிய ஆராய்ச்சியாளர், தாவர இயலாளர். மத்திய அமெரிக்காவில் அபூர்வ

23