பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவளைச் சுற்றிலும் கிளைகள் ஆடின. ஆயினும் சீதா தன் பிடியை விட்டுவிடவில்லை. இப்போது தண்ணிர் வெகு அருகில் இருந்தது. அவள் பயந்து போனாள். வெள்ளத்தின் பரப்பையோ, ஆற்றின் அகலத்தையோ அவளால் பார்க்க முடியவில்லை. உடனடி அபாயத்தை, தண்ணீர் தன்னைச் சூழந்து கொண்டிருப்பதை மட்டுமே அவள் காணமுடிந்தது.

காகம் மரத்தைச் சுற்றிப் பறந்தது. அது கடும் கோபம் கொண்டிருந்தது. அதன் கூடு இன்னும் கிளைகளிலேயே இருந்தது - ஆனால் நெடுநேரம் இராது. மரம் புரண்டது, ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. கூடு நீரில் விழுந்தது. முட்டைகள் ஒவ்வொன்றாய் விழுவதை சீதா பார்த்தாள்.

காகம் நீருக்கு மேலே தணிவாய்ப்பறந்தது. ஆனாலும் அது செய்வதற்கு ஒன்றுமில்லை. சில நொடிகளில் கூடு மறைந்து விட்டது.

பறவை சற்றுத்தூரம் மரத்தைத் தொடர்ந்தது. அதில் ஏதேனும் தங்கியிருக்கும் என்று அது எண்ணியது போலும், பிறகு, சிறகுகளை அடித்தபடி, அது ஆகாயத்தில் மேலெழும்பி, ஆற்றைக் கடந்து பறந்து மறைந்தது.

சீதா மீண்டும் தனிமைப்பட்டாள். ஆனால் தனிமையை உணர அவளுக்கு நேரமில்லை. எல்லாம் ஆட்டத்தில் இருந்தது-மேலும் கீழுமாய், பக்கவாட்டிலும் முன்னேயுமாய், விரைவில் மரம் குப்புறக் கவிழும். நான் தண்ணிரில் விழுவேன்" என்று அவள் நினைத்தாள்.

தூரத்தில், வெள்ளத்தில் சிக்கிய ஒரு ஊரையும், ஆட்கள் படகுகளில் செல்வதையும் அவள் பார்த்தாள். ஆனால் அவர்கள் வெகு தொலைவில் இருந்தார்கள். அதன் பெரிய அளவு காரணமாக, அந்த மரம் ஆற்றில் வெகு வேகமாய் நகரவில்லை. சில சமயம், ஆழமில்லாத நீரில் போன போது, அதன் வேர்கள் பாறைகளில் மாட்டிக்கொள்ள, அது நின்றது. ஆனால் நெடுநேரம் அல்ல. ஆற்றின் ஒட்டம் அதை விரைவில் அடித்துச் சென்றது.

ஒரு இடத்தில், ஆற்றின் ஒரு வளைவில் மரம் ஒரு மணல்மேட்டில் தட்டி நின்றுவிட்டது.

சீதா மிகக் களைத்திருந்தாள். அவள் புஜங்கள் வலித்தன. அவள் நேராக நிமிர்ந்திருக்கவில்லை. மரம் பெரும்பாலும் ஒரு பக்கமாய் சாய்ந்திருந்ததால், அவள் கீழே விழாமல் இருப்பதற்காகக் கிளையை இறுகப் பற்றிக் கிடக்க நேர்ந்தது. மழை இன்னும் பெய்தது.

அப்போது தான் யாரோ கூப்பிடுவதை சீதா கேட்டாள். நதியின் முன்புறம் பார்ப்பதற்காக அவள் கழுத்தை வளைத்தாள். தன்னை நோக்கி ஒரு சிறு படகு வருவதை அவள் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்தப் படகில் ஒரு பையன் இருந்தான். அவன் படகை மரத்துக்கு

40