பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிந்தது. அவற்றைத் தன் பைக்குள் வைத்து, பாறையின் உச்சிக்கு ஊர்ந்து ஏறினான். நரிகள் நின்ற திக்கில் பெரிய கல்லை வீசினான். கல் குறி தவறவில்லை. தடாலென்ற ஒசையையும், ஒரு நரி வேதனையால் ஊளை யிடுவதையும் அவன் கேட்டான். தொடர்ந்து மேலும் இரண்டு கற்களை நாணல் துப்பாக்கி மூலம் எறிந்தான். அவையும் குறிப்பாய்த் தாக்கின. நரிகள் ஒடின. தூரப் போய் ஊளையிட்டன.

சுந்தர் பாறையில் வழுக்கி இறங்கினான். ஐந்தாறு அடிகள் நடந்திருப்பான். அதற்குள் அவன் கால்கள் ஒரு மரத்தின் வேரில் சிக்கிக் கொண்டன. அவன் கைகளால் தடவி அடிமரத்தை உணர்ந்தான். முரட்டுக் கொடி ஒன்று மரத்தைச் சுற்றியிருப்பதைக் கண்டான். அவன் மரத்தின் கிளைமீது ஏறி வசதியாக அமர்ந்தான். திடீரென்று ஒரு சாகுருவி, "அவனைச் சுடு! அவனைச் சுடு!" என்று கத்தியது. இது. அவனை அதிகம் அச்சுறுத்தியது. உடனே தன்னைக் காப்பாற்ற கடவுள் இருக்கிறார் என்று தனக்குள் கூறிக் கொண்டான். பிறை நிலவு மெலிதாக ஒளி சிந்தியது. அவன் நன்றாகப் பார்க்கமுடிந்தது. அடிமரத்தில் சாய்ந்தபடி குரங்குபோல் தோன்றிய ஒரு உருவம் நிற்பதை அவன் கண்டான். அவன் கள்ளத்தனமாகக் கிளைகளில் ஊர்ந்து, குரங்கிற்கு நேர் மேலே வந்தான்; தன் பையிலிருந்த கற்களை அதன் தலையில் கொட்டினான். குரங்கு அலறியடித்து ஒடியது. இதர கிளைகளில் குந்தியிருந்த கூட்டாளிக் குரங்குகளும் கத்திக் கொண்டு கீழிறங்கின. அதுவே சுந்தர் தப்புவதற்கு ஏற்ற தருணம். அவன் மரத்தில் நழுவி இறங்கினான். கத்தியால் ஒரு நீண்ட குச்சி வெட்டி, அதை உபயோகித்து நாணல்களை விலக்கி வழிகண்டான். மீண்டும் பாறையை அடைந்து, அதன் மேலேறி, சற்று நேரம் படுத்துக் கிடந்தான். இதற்குள் பிறை நிலா மறைந்து விட்டது. வானத்தில் ஒருசில வெள்ளிகள் மின்னின.

சுந்தரின் நினைவெல்லாம் பசுக்களைப் பற்றியே இருந்தன. அப்பாவிப் பிராணிகள் இருட்டில் வழி தவறிப் போயிருக்கும். அவை உதவியற்றவை. அவற்றின் அச்சமும் வேதனையும் அவன் அனுபவிப்பதை விட அதிகமிருக்கும். அவன் குழலை ஊதினான். ஆனால் நரிகளின் ஊளை அதை அமுக்கிவிட்டது.

பசியும் தாகமும் அவனை வாட்டின. ஏதாவது பழத்தைப் பறிக்கலாம் தான். இருட்டில் அவனால் தெளிவாய்ப் பார்க்க முடியவில்லை.

பிறகு வெளிச்சம் தெரிந்தது. அது மனிதர்களா அல்லது பிசாசுகளா? சுந்தர் வியர்த்து விறுவிறுத்தான்.

வெளிச்சம் மங்கலாக இருந்தது. திடீர் ஒசை ஒன்று அமைதியைக் குலைத்தது. சுந்தர் ஊன்றிக் கவனித்தான். அது மரம் வெட்டும் ஒசை அல்ல.

77