பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தைரியம் முழுவதையும் சேர்த்து, சுந்தர் மீண்டும் பாறையிலிருந்து நழுவிக் கீழிறங்கினான். கைகளாலும் கால்களாலும் நகர்ந்து வெளிச்சத்தை நெருங்கினான்.

நாலைந்து பேர் ஒரு செத்த பிராணியைத் தோலுரித்துக் கொண்டிருந்தார்கள். அது அவனது புள்ளிவால் பசுவோ? பாவம்-அது கன்று போட்டு நான்கு மாதங்களே ஆயின. நடப்பதைக் கவனிக்க சுந்தர் ஒரு மரத்தின் பின் பதுங்கினான். அந்த ஆட்கள் ஒரு புட்டி நிறைய மின்மினிப் பூச்சிகளை அடைத்து அதை விளக்காக உபயோகித்தார்கள். வெட்டுண்ட மாட்டின் தலையை அவன் பார்த்தான். அது அவனது பிரியமான புள்ளி வால் பசு இல்லை, ஏதோ வயதான வெள்ளைக் காளை. அவன் நிம்மதியாக மூச்சு விட்டான். இது அவனுக்குத் துணிவும் அளித்தது. அவன் செய்ய வேண்டிய காரியம் அந்த மின்மினிப் புட்டியைத் திருடுவது தான். திருடர்கள் அதை சாக்கினால் மூடியிருந்தார்கள். தங்களுக்குத் தேவைப் பட்ட போது ஒரு பக்கத்தை மட்டும் திறந்து காட்டினார்கள். அவர்கள் தங்கள் கொடிய காரியத்தில் முனைந்திருக்கையில், சுந்தர் ஒசைப்படாது, சாக்கால் மூடிய புட்டியை எடுத்து மரத்தின் பின் மெல்லப் போனான்.

கும்பலில் ஒருவன், "இங்கே கொஞ்சம் வெளிச்சம்" என்று கத்துவதை அவன் கேட்டான்.

கல்லின் மேல் வைத்த புட்டியை எடுக்க மற்றொருவன் திரும்பினான். அது இல்லை. புட்டி எங்கே போயிருக்கும்?

"நான் அதை இங்கே தான் வைத்தேன். நிச்சயமாக"

"நன்றாகப் பார் அங்கே தானிருக்கும்."

"நான் கல் மேலே தான் வைத்தேன். சந்தேகமில்லை."

"யாரோ நம்மைப் பார்த்து விட்டார்கள். நாம் கையும் களவுமாய் அகப்பட்டுக் கொள்வோம். தப்பி ஒடுவதே நல்லது."

மாட்டிறைச்சியில் கிடைக்கக் கூடியதை எடுத்துக் கொண்டு வேகமாகச் செல்ல அவர்கள் தீர்மானித்தார்கள். செத்த மாட்டை வேகம் வேக மாக வெட்டத் தொடங்கினார்கள். திடீரென இருட்டில் புல்லாங்குழல் ஒசை மிதந்தது. அதைக் கேட்டு அவர்கள் பயத்தால் உறைந்தனர். கத்திகளைக் கீழே போட்டுவிட்டு, மரத்தின் மீது ஏற அவர்கள் ஒடினார்கள்.

குழலோசை ஒரு நரியின் காதிலும் விழுந்தது. அது தன் தலையை உயர்த்தி ஊளையிட்டது. மற்ற நரிகளும் கூட்டமாய் குரல் எழுப்பின. இறைச்சியை அவை மோப்பம் பிடித்தன. செத்த மாட்டை நோக்கி வந்தன. அதைப் பாய்ந்து குதறின. மரத்தின் மேலேயிருந்த திருடர்கள், தாங்கள் கொன்ற காளையை நரிகள் தின்பதை வருத்தத்தோடும், செயலற்றும் கவனித்தார்கள்.

78