பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இதற்குள் சுந்தர் தன்னிலை அடைந்தான். அவன் கண்கள் இருட்டில் பார்க்கப் பழகிவிட்டன. அவன் தன் பசுக்களை கூப்பிட்டபடி, குழலை இசைத்தான்.

காட்டின் பறவைகளும் மிருகங்களும் கலவரம் அடைந்தன. பறவைகள் கிளுகிளுத்தன, கீச்சிட்டன. சிறு பிராணிகள் அவனை கடந்து போயின. மானின் கவலை நிறைந்த கீச்சொலி காற்றை நிறைத்தது. ஆனாலும் அவனுடைய பசுக்களின் தடயமே கானோம்.

பயம் அவன் கால்களுக்கு வேகம் சேர்த்தது. அவன் ஒடலானான். முட்களும் புதர்களும் அவனது கைகளிலும் கால்களிலும் குத்தின; பிறாண்டின; அவனைக் காயப்படுத்தின. திடுமென ஒரு மரத்தின் வேர் தடுக்கி அவன் தலைகுப்புற விழுந்தான். அதிர்ஷ்டவசமாக, மின்மினிப் புட்டி உடையவில்லை. அதன் மங்கிய ஒளியில் தன் முழங்காலின் கீழே ஆழமான வெட்டுப்பட்டிருப்பதையும், அதிலிருந்து நிறைய ரத்தம் வடிவதையும் அவன் கண்டான். ரத்தப் பெருக்கை நிறுத்துவதற்காக, காயத்துக்கு உயரே சாக்குக் கயிற்றைக் கட்டினான். நோவு அதிகம் இருந்தது. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை.

அவனது இரத்தத்தின் வாடை ஏதாவது கொடிய மிருகத்தை கவர்ந்து இழுக்கும் தான் உயிரோடு விழுங்கப்படலாம் என்ற நினைப்பு அவனுள் அச்சம் புகுத்தியது. அல்லது, எறும்புகள் மொய்த்து அவனை அரித்துத் தின்னும்! என்ன பயங்கரம்!

அவன் மூலிகை இலைகளைக் கொண்டு தன் காயங்களை சுத்தம் செய்தான். தன் பலம் கொண்ட மட்டும் கூவி, தனது பிரியமான புள்ளி வால் பசுவை அழைத்தான். ஆனால் அவன் அழைப்பு உண்மையில் ஒரு முனு முனுப்பாகத்தானிருந்தது. முற்றிலும் களைப்புற்று சுந்தர் இருந்த இடத்திலேயே தூங்கி விட்டான்.

***

நடந்தது வெகு சாதாரணமானது. பசுக்கள் வயிறாற மேய்ந்தன. அசை போட்டன. பிறகு, வீடு திரும்ப நேரமாயிற்று என்று சுந்தருக்குச் சொல்ல சத்தமிட்டன. அவை கத்திய போது சுந்தர் தூங்கினான். புள்ளி வால் அவன் காலை நக்கிய போது, அதை அவன் ஓங்கி மிதித்தான். பசுக்கள் சுந்தர் இல்லாமலே ஊர் திரும்பின. அவை தொழுவங்களில் கட்டப்பட்டன.

இருட்டிய பிறகும் சுந்தர் வீடு திரும்பாததனால், அவன் தந்தை அவனை தேடிப் போனார். பசுக்கள் வந்துவிட்டன என அறிந்ததும், சுந்தர் கோயிலுக்கு திருவிழா பார்க்கப் போயிருப்பான் என்று தீர்மானித்து, அவர் வீடு திரும்பினார்.

79