44
சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்
வயற் காட்டிற்குச் சென்று ஒரு கொக்கைக் கவனிக்கட்டும். அது தன்னுடைய தாய் தந்தையைத் தன் சிறகுகளில் அடைக்கலம் தந்து பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்வதையும், தன்னைப் பெற்றவர்களுக்கு உணவைத் தேடித் தருவதையும் காணலாம்.
எனவே, பிள்ளையாகப் பிறந்த மனிதனே, நீயும் உன் பெற்றோரைப் பாதுகாத்து நன்றிக் கடனைச் செய்திடத் தவறாதே.
பெற்றவர்களின் பேச்சுப்படி நட. தாய் சொல்லைத் தட்டாதே. பெற்றோர்கள் எதையும் உன் நன்மைக்குத்தான் கூறுவார்கள். உன் மீது உள்ள பற்றின் காரணமாகத்தான் பெற்றோர்கள் கண்டனங்களைச் செய்வார்கள்.
நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர்கள் உன் பெற்றோர்கள். உனக்காகப் பாடுபட்டவர்கள். எனவே, அவர்களின் வயதிற்கு மதிப்புக் கொடு, நரைத்த முடியுடன் விளங்கும் உன் பெற்றோர்களை அவமதிக்காதே அவர்களின் வாழ்விற்குத் துணையாக இரு. அவர்களின் வாழ் நாள்கள் அமைதியுடன் நடக்கட்டும். நீ, உன் பெற்றோருக்கு அளிக்கும் மதிப்பும் ஒத்துழைப்பும் உன்னுடைய பிள்ளைகள் கண்டு, அவர்களும் உன்னைப் போலவே உனக்குதவி செய்து பாதுகாத்து நல்லதைச் செய்வார்கள்.