பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அமுதசுரபி

டத்தையே லட்சியமாக எண்ணி விரையும் அந்த ஓசையை உற்றுக் கவனித்தான்.

எப்படியோ அவனால் ஒதுக்கப்பட்ட பாமா மறுபடியும் அவன் இருப்பிடத்தை லட்சியமாகக் கொண்டு வந்துவிட்டாள்.

"எப்படி? எப்படி?" என்று மருகினான் அவன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியே போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த அவன் கார் மரத்தில் மோதி அவனுக்குக் கர்ல் எலும்பு முறிந்துவிட்டது. முதலில் ஆஸ்பத்திரியில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டுப் பிறகு வீட்டுக்கே வந்துவிட்டான். வீட்டில் யார் இருக்கிறார்கள்? அம்மாதான் போய் ஆறு மாதங்கள் ஆகின்றனவே! அதற்கும்தான் பாமா வந்திருந்தாள். அவன் ஒரு கோடியிலும், அவள் ஒரு கோடியிலுமாக இருந்து எப்படியோ தாயின் ஈமக்கடன்களை முடித்துவிட்டனர். கடைசியாக ஊருக்குப் போகும் தினத்தன்று அவள் கூடத்தில் அவன் முன் வந்து நின்றதும் அவன் சேவகனைத் திரும்பிப் பார்த்ததும், சேவகன் காரோட்டியை விளித்ததும் திரைக் காட்சிகள் போல் தெரிந்தன.

அவ்வளவு பெரிய வீட்டில் இதே கட்டிலில் படுத்து ஜன்னல் வழியாக அடிவானத்தையும், மரங்களையும், மனிதர்களையும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிற்று. அவன் மனமறிந்து குளிர்ந்த வார்த்தை பேசி நடந்துகொள்ள யாரிருக்கிறார்கள்?

திடீரென்று மனத்திலே ஏக்கம் பிறந்ததும் 'அவள்?’ என்று நினைத்தான் அவன். ஆங்...அவளைப்பற்றிய நினைப்பு அவன் மனத்தின் மூலையில் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.

அவள் கருப்போ, சிவப்போ, அழகோ, குருபியோ வாழ்க்கைப் பிரயாணத்தில் அவனுடன் அவளால்தான் வரமுடியும். மற்றவர்கள் எல்லாரும் விருந்தினர் போலத்தான்.

அவன் மனம் இவ்விதம் முதன் முதலாக அவளைப்பற்றி எண்ணத் தொடங்கியபோது, எங்கோ ஒர் ஊரில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் தினசரித்தாளில் தன் வேதனையை மறக்க முயன்று கொண்டிருந்த பாமாவுக்குக் கலக்டர் கண்ணனின் உடல்நிலை கொஞ்சம் சீரடைந்து வருவதாகச் செய்தி வந்திருப்பதைக் காண முடிந்தது. பதைபதைத்தாள் அவள்.

பூஜை அறையிலிருந்து வெளியே வந்த தந்தையை 'அப்பா' என்று அழைத்தாள்.

"அப்பா! அவருக்கு உடம்பு சரியில்லையாம். நான் போகிறேன் அப்பா அங்கே!"

'யாருக்கு? அவனுக்கா?' வெறுப்பாக உமிழ்ந்தார் அவர்.

"ஆமாம் அப்பா. போகிறேன்."

"போ.போ..."

ட்டிலில் துயில் கொள்ளும் பாமா அசைந்து படுத்தாள். முத்தென வியர்வை முகமெங்கும் அரும்பி வழிந்தன. பனியிலே நனைந்து கசங்கியமலர் காற்றில் அசைவதுபோல் தோற்றமளித்தாள். "இந்த மலரை நான் எப்படித்தான் கசக்கி விட்டேன்?" துக்கம் தொண்டையை அடைக்க முணுமுணுத்தான் கண்ணன்.

அன்று காலொடிந்து கிடந்தவன் எதிரில் அந்தக் காலை நேரத்தில் தெய்வ மாதுபோல் வந்து நின்றாள் பாமா.

"நீயா?” என்றான் கண்ணன். "ஏன் வந்தாய்?" என்று கேட்டு வாசலைச் சுட்டிக் காட்டி விடுவானே என்று அச்சத்துடன் நுழைந்தவளுக்கு சாயுஜ்ய பதவி கிடைத்தாற்போல் இருந்தது.

"உங்களுக்கு உடம்பு சரியில்லையாமே." இருவரும் ஒன்றும் பேசவில்லை.

பாமா அழகிதான். அவள் கறுப்பாக இருந்தால் என்ன? பளிங்கான அவள் இதயத்தை அறிந்து கொள்ளாத பாழாகி விட்டேனே.

அவளை அவன் நன்றாகக் கவனித்துப் பேசவே அவன் மனச்சாட்சி இடங் கொடுக்கவில்லை. அன்பெனும் தெய்வத்தின்முன், குரூரமுள்ள ஒரு கல்நெஞ்சன் குற்றவாளியாக நின்றிருந்தான்.

கண்ணன் உடல்நிலை தேறியதும், மார் வலி என்று அவள் துடித்ததும், படுக்கையில் விழுந்ததும் அவன் மனச்சாட்சிக்கு ஒரு மறுப்பாக அமைந்தன.

'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதா?'

பாமா பேசி நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எப்பொழுதாவது கண் திறந்தால் ஆவலுடன் அவனைப் பார்த்துவிட்டு, விழிக்கிடையில் முத்தென நீர் தேக்கி விழிகளை மூடிக் கொண்டு விடுவாள்.

'பாமா எப்படியும் பிழைத்துவிட வேண்டும். இந்தப் பெரிய வீடடுக்கும், என் இதய சாம்ராஜ்யத்துக்கும் அவள் ராணி ஆகிவிட வேண்டும். ஆண்டவனே! அவளைப் பிழைக்க வைத்து விடு' என்று வேண்டுவான் அவன்.

அவன் உள்ளக்குரல் ஓங்கி ஒலித்து ஆண்டவனே அடையும் முன்பே பாமா நீர் துயிலில் பனிபடர்ந்த அந்தக் காலை நேரத்தில் துவண்ட மலராக ஓய்ந்து விட்டாள்.

அவன் வாயடைத்து, மெய் விதிர்க்க சக்தி இழந்த சிவனைப் போல நின்ருன். திருமகள் நீங்கிய வைகுந்தமாக அந்த வீடு மெளன சோகத்தில் ஆழ்ந்திருந்தது.