பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பனிமலர்

39

உனக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா?" அவன் மாமி வந்து பொரிந்து தள்ளியவுடன் கண்ணன் நிலை கொள்ளாமல் தவித்தான்.

தீர்ந்துபோன விஷயத்தை ஒழுங்குபடுத்தி உருவப்படுத்திப் பேசித் தீர்ப்பதற்கென்றே பலர் வந்திருந்தார்கள். பந்தல் நிறைய பளபளத்த பாத்திரங்களின் பெருமையிலேயே லயித்திருந்த அவன் தாய்க்கு தன் மருமகளை ஏறிட்டுப் பார்க்க அன்று மாலைதான் முடிந்தது.

அந்த ஆணழகனின் பக்கத்தில் பாலில் விழுந்த தூசுபோல் அவள் அமர்ந்திருப்பதைத் தாய் கவனித்தாள்.

'நம் கண்ணனின் அழகு எங்கே? எல்லாரும் சொல்வதுபோல நாம் பணத்துக்கு அடிமையாகிவிட்டோமா?'

கண்ணன் அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. 'மாப்பிள்ளைக்கு என்ன குறை? கலகலப்பாக இல்லையே-பெண் வீட்டார் முன்பு இந்தக் கேள்வி பெரிய உருவில் நின்று அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது.

தோ அவன் எதிரே கண்மூடி மெளனியாகிப் படுத்திருக்கும் அவளைக் கவனித்தான் கண்ணன்.

"மிஸ்டர் கண்ணன் உங்கள் மனைவியின் உலக வாழ்க்கை இனி நாட்கள் அளவில்தான் இருக்க வேணடும். அந்த மார்வலி வந்தால் அவள் பிழைக்க மாட்டாள்."

ஒரு வாரத்திற்கு முன்பே வைத்தியர் முடிவாகக் கூறிவிட்டார். வியாதியின் முடிவாக, வைத்தியரின் முடிவாக மட்டும் இருந்திருந்தால் அவன் வேதனைப்பட மாட்டான். மாலையிட்டுத் தன்னை மணாளனாக ஏற்றுக்கொண்ட மறு விநாடியிலிருந்து அவள் இதயச் சுவர்களைத் தகர்த்து அவளுக்கு இவ்வித முடிவை ஏற்படுத்தியவன் அவன்தானே.

மறுபடியும் அவன் அவளை உற்று நன்றாகக் கவனித்தான். அவளுடைய நிறமே மாறிவிட்டதே. நல்ல சிவப்பாக இராவிட் டாலும், மாந்தளிர் மேனியளாக இப்பொழுது அவள் காணப்பட்டாள், கழுத்தில் பசுமையாகத் துலங்கும் மஞ்சள் சரடும் நெற்றியிலும் வகிட்டிலும் இட்ட குங்குமத்துடன் ஒரு தெய்வ மங்கையாகத்தான் இருந்தாள். அழகு என்பது - வெறும் வெளித் தோற்றத்தை மட்டும் பொறுத்ததில்லை. அழகின் இருப்பிடமே இதயம்தான் என்பதை அவன் புரிந்துகொள்ள இவ்வளவு காலம் பிடித்துவிட்டதே! வெளியே அமைதி மட்டும் இல்லை. ஒரே பனி. மார்கழி மாதத்தின் கூதல் உடலைத் துளைத்துவிடும்போல் இருந்தது. மெல்லிய துகிலால் உலகையே போர்த்திவிட்டாற்போல் உலகம் மறைந்து கிடந்தது.

இந்தப் பனியிலும் சாரலிலும் அவள் மேனியெங்கும் வியர்த்துக் கொட்டிக் கொண்டேயிருந்தது. வேதனைத் தீயைத் தணிக்க இயற்கை அவளுக்கு இந்த அற்புதமான வசதியைச் செய்து வருகிறது போலும்.

முதன் முதலாக அவளைச் சொல்லால் சுட்டவுடன் அவள் சகித்துக்கொண்டுதான் அதை விழுங்கிக் கொண்டாள். காலத்தின் தேய்வில் மனத்துக்கு மாறுதல் உண்டு என்று நம்பினாள். அவனோ? தன் அந்தஸ்தின் போதையில், அழகன் செருக்கில் அவளைத் துச்சமாக மதித்தான். ஒருநாள், ஒரு பொழுது அவன் குரலெடுத்துத் தன்னை அழைப்பான் என்கிற நம்பிக்கையில் ஒரு வருடம் ஓடிவிட்டது.

பாமாவின் அப்பா வந்தார் பெண்ணைப் பார்த்துப் போக.

"என்ன அம்மா இப்படி இளைத்துவிட்டாய்?" - உபசாரத்துக்காகக் கேட்ட வார்த்தை அல்ல.

"இல்லையே அப்பா, எப்பொழுதும் போல்த்தான் இருக்கிறேன்."

"நீ சொன்னால் எனக்குக் கண் இல்லையா அம்மா?"

தந்தையை ஏறிட்டுப் பார்த்தவள் தலையைக் குனிந்து, கண்ணீர் உகுத்தாள். அப்புறம் அவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள்.

"உன்னிடம் மாப்பிள்ளை பேசுவதே கிடையாதா? ஏனென்று கேட்பதில்லையா? நீ பேசாமல் இருக்க உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தமடி அம்மா!"

தாயின் கேள்விச் சரங்கள் மகளின் இதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து வேதனைப்படுத்தின.

"என்னை ஒன்றும் கேட்காதே அம்மா. அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னைப் பிடிக்கவில்லை."

"பிடிக்கவில்லையாமா?" என்று இரைந்தார் தகப்பனார்.

தகப்பனார் இரைவதற்கு மேலும் ஒருபடி போகத் தயாராக இருந்தாள். ஆனால் பாமாவின் கரங்கள் அவர் முன் நீண்டு இடைமறித்தன.

தொலைதுாரத்திலிருந்த ரயில் நிலையத்தி லிருந்து 'கூ' வென்ற ஓசையுடன் ரயில் கிளம்பும் சத்தம் கேட்டது கண்ணனுக்கு. தன்னுள்ளே வெவ்வேறு மனத்தையுடையவர்களை ஏற்றிக்கொண்டு தான் சேருமி