பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அமுதசுரபி

ஆனால், ஆறேழு வருஷங்களுக்கு முன் கண்ணனுக்கு இதொன்றும் விளங்கவில்லை.

அவள் கரிய நிறம்தான். அது மட்டுமில்லை. ஒற்றை நாடியான தேக அமைப்பு. தலை நிறைய சாட்டைபோல் நெளியும் கூந்தல் அழகு அந்தக் கறுப்பின் முன் எடுபடவேயில்லையே!

பாமா அவன் அறையில் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்தவுடன் ஏதோ ஒரு மிருகத்தைப் பார்ப்பதுபோல் அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

கோயிலில் இருக்கும் விளக்குப் பெண் ஒன்று அசைந்தாடி நிற்பதுபோல் தோற்றமளித்தாள் அவள். வெட்கம் வேறு அவளைச் சூழ்ந்துகொள்ளவே குனிந்த தலையை அவள் நிமிர்த்தவேயில்லை.

"என்ன இது? எங்கே வந்தாய்?" கண்ணனின் அதட்டும் குரலில் அவள் துணுக்குற்று நிமிர்ந்தவுடன் அழகின் பூரணத்துடன் நெடிதுயர்ந்து நிற்கும் கணவனை நன்றாகப் பார்த்தாள். பார்த்தவள் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

'இவர்? இவர்? இவ்வளவு அழகா? அம்மாடி!'- மனம் பொங்கிப் பூரிக்க விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள் பாமா.

கண்ணன் சுட்டெரிப்பதைப் போல அவளைப் பார்த்தான்.

"அதோ பார்! இது என்னுடைய அறை. இங்கே உனக்கு ஒன்றும் வேலை கிடையாது. நீ போகலாம்."

வாசற்படியைச் சுட்டிக் காட்டிய விரலின் அசைவிலேகூட வெறுப்பு நிழலாடியது. அவள் வெளியே வரவில்லை. அறையின் மூலையில் முடங்கிக் கொண்டாள்.

இதோ இன்று பஞ்சணையில் அமைதியாக உறங்குகிறாளே அதே பாமாதான். இந்த பாமா வேறு. வேதனைத் தீயில் தன்னை அர்ப்பணம் செய்து மீளா இதய நோய்க்கு ஆளாகி இன்று கணவனின் அன்பை அடைந்தும் அநுபவிக்க முடியாமல் ஏங்கிக் கிடக்கிறாள்.

விடிய இன்னும் இரண்டு ஜாமங்கள் இருந்தன. வெளியே புல்தரையில், இலைகளில், தென்னங் கீற்றுகளில் பனிநீர் முத்து முத்தாகப் பளபளத்தன. அவள் முகத்தில் அரும்பி யிருந்த வியர்வையைத் துண்டில் ஒற்றிவிட்டான் கண்ணன்.

கணவனின் கரம் பட்டவுடன் அவள் இமைகள் லேசாகத் திறந்து மூடின. வெள்ளை வெளேர் என்று வெளுத்திருந்த அந்த விழிகளில் சோகம் பொழியும் இரு கருமையான வட்டங்கள் ஒளி மங்கிப் புரண்டு கொடுத்தன.

"பாமா! பாமா! ஏதாவது சாப்பிடுகிறாயா? பழரசம் தரட்டுமா?"

பாமா மூடிய விழிகளைத் திறக்காமல் அவன் கொடுத்ததைச் சுவைத்து, உதடுகளை தாக்கினல் தடவிக்கொண்டே அயர்வுடன் படுக்கையில் கிடந்தாள்.

கண்ணன் சாய்வு நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தான். பாழும் பொழுது நகர்வதாகக் காணோம்.

நோயாளியும், இராப் பொழுதும் ஒன்றுடன் ஒன்று உறவாடி இணைந்து மெதுவாக நகர்வதுபோல் இருந்தது அவனுக்கு. இவளை அவன் அழகில்லை என்று அன்று ஒதுக்கிய காரணம? பெண்ணைப் பார்ப்பதற்கு அவனும்தான் போயிருந்தான். யாரும் அவன் கண்களைக் கட்டிவிடவில்லை.

வீட்டுக்கு வந்ததும் அம்மா, 'என்னடா சொல்கிறாய்' என்று கேட்டாள்.

"நீ என்ன சொல்கிறாய்?"

"நிறம்தான்-" என்று இழுத்தாள் அம்மா.

"அப்போ விட்டுத் தள்ளு. வேறு பார்க்கிறது..."

"தள்ளுகிறதா? அவர்கள் செய்கிற மாதிரி யாரும் செய்ய மாட்டார்கள். பெண்களின் கறுப்பு நாளடைவில் உதிர்ந்து போகும். அதுதான் ஏதேதோ விற்கிறதே இந்த நாளில் பூசிக்கொண்டால் சிவப்பாகிவிடுகிறாள்-'

"சரி-உன் இஷ்டம்."

மாப்பிள்ளை அழைப்பைச் சாதாரணமாகவா நடத்தினார்கள்? இரட்டை நாயனம் பாண்டு உள்பட அமர்க்களமான ஊர்வலம் தன்னுடைய பிள்ளை வைர மோதிரம் பளபளக்க, சூட்டும், கோட்டுமாக ஊர்வலம் வருவதைப் பெற்ற மனம் கண்டு பூரித்துப் போயிற்று. சும்மாவா பின்னே? ஒரு மாவட்டத்துக்கே அவன் அதிகாரி. கலைக்டர்!

நிச்சய தாம்பூலத்தின்போது உள்ளேயிருந்து பெண்ணின் வரவை எல்லாரும் எதிர்பார்த்து அந்த அறையின் வாசற்படியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாமா வந்தாள். சம்பந்தி வீட்டில் கசமசவென்று பேச்சு ஆரம்பமாயிற்று.

'கறுப்பு. கறுப்பு...' எல்லாருமா அப்படிச் சொல்ல வேண்டும்?

"ஏண்டா கண்ணா! இந்தக் கரிக்கட்டையைக் காலில் கட்டிக்கொண்டாயே அப்பா,