உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுபாணன் சென்ற பெருவழி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இடைகழி நாட்டு நல்லூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறு பாணன், ஓய்மா நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய எயிற் பட்டினத்துக்குச் சென்றான். சென்றவன் அங்குத் தங்கினான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் தென்மேற்கே நெடு வழியே நடந்தான். நெடுந்தூரம் நடந்து வேலூர் என்னும் ஊரை யடைந்தான். இது முல்லை நிலத்தில் இருந்த ஊர்.

"திறல்வேல் நுதியில் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூர் எய்தின்
உறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்."

என்று (சிறுபாண். 172-179) நத்தத்தனார் இந்த வேலூரைப் பாணனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இந்த வேலூரை, வட ஆர்க்காடு மாவட்டத்தில், காட்பாடி ரயில் நிலயத்துக்கு அருகில் உள்ள வேலூர் என்று இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் கருதுகிறார். (Identification of Sopatama by S. S. Desikar. pp. 129-140. Quarterly Joumal of the Mythic Society, Vol. XXI.) இது தவறு. நத்தத்தனார் கூறுகிற வேலூர், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் ஓய்மா நாட்டில் இருக்கிறது. தேசிகர் கூறும் வேலூர், வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேறோர் இடத்தில் இருக்கிறது. இரண்டு ஊர்களும் வெவ்வேறிடங்களில் உள்ள வெவ்வேறு ஊர்கள். நத்தத்தனார் கூறும் வேலூர் அக்காலத்தில் சிறப்புற்றிருந்து. இப்போது குக்கிராமமாக இருக்கிறது. இப்போது வட ஆர்க்காடு மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் வேலூர் அக்காலத்தில் இருந்ததா என்பது ஐயத்துக்கிடமாக இருக்கிறது. சிறு பாணன் சென்ற வேலூர், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் தாலுகாவில், கிடங்கிலுக்கும் எயிற்பட்டினத்திற்கும் இடைவழியில் இப்போது குக்கிராமமாக இருக்கிற வேலூரே என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இந்த வேலூர் ஓய்மா நாட்டு வேலூர் என்று பெயர் பெற்றிருந்தது. இந்த வேலூரின் தலைவன் 'ஓய்மா நாட்டு வேலூருடையான்' என்று ஒரு சாசனத்தில் கூறப்படுகிறான். (No.25.S.I.I.Vol.XIII)

வேலூரில் தங்கிய சிறுபாணன், அவ்வூரிலிருந்து புறப்பட்டு வடமேற்காகச் செல்லும் பெருவழியே சென்றான். சென்று மருத நிலத்தில் உள்ள ஆமூர் என்னும் ஊரையடைந்தான்.