5
"மருதஞ் சான்ற மருதத் தண்பணை
அந்தணர் அருகா அருங்கடி வியநகர்
அந்தண் கிடங்கின் அவனாமூ ரெய்தின்
வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின்
உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
விழுங்கா லுலக்கை யிருப்புமுகந் தேய்த்த
வவைப்பு மாணரிசி யமலைவெண் சோறு
கவைத்தாள் அலவன் கலவையோடு பெருகுவிர்."
என்று (186-195) சிறுபாணனுக்கு ஆமூரில் கிடைக்கக்கூடிய உணவைக் கூறுகிறார் நத்தத்தனார்.
இந்த ஆமூர் எது என்பது தெரியவில்லை. நல்லாமூர் என்று பெயருள்ள ஊர் ஒன்று இருக்கிறது. இந்த நல்லாமூர் சிறுபாணாற்றுப்படை கூறுகிற ஆமூராக இருக்கக்கூடும். பழைய ஆமூரும் இப்போதைய நல்லாமூரும் ஒரே ஊராக இருக்கக்கூடும். ஏனென்றால் இந்த நல்லாமூர் கிடங்கிலுக்கு அருகில் இருக்கிறது.
ஆமூரிலிருந்து புறப்பட்டு மேற்கே நெடுவழியே சென்றால், கடைசியில் நல்லியக்கோடனுடைய கிடங்கில் என்னும் ஊரை யடையலாம் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.
எனவே, கிடங்கிலுக்குச் சிறுபாணன் சென்ற பெருவழி, அல்லது நத்தத்தனார் சென்ற பெருவழி இது: இடைகழிநாட்டு நல்லூரிலிருந்து புறப்பட்டு, இப்போதைய மரக்காணமாகிய எயிற்பட்டினத்துக்குப் போய் அங்கிருந்து வேலூருக்குச் சென்று, அங்கிருந்து புறப்பட்டு ஆமூரை அடைந்து, ஆமூரிலிருந்து கிடங்கிலை யடைந்தார் என்பது தெரிகிறது. (பாடம் காண்க)
கிரேக்க ஆசிரியரின் குறிப்புகள்: யவனராகிய கிரேக்கர் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்துடன் வாணிபம் செய்தனர். கிரேக்க நூலாசிரியர்கள், தமிழ் நாட்டிலிருந்த அக்காலத்துத் துறைமுகப் பட்டினங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். அவற்றுள் சோபட்டினமாகிய எயிற்பட்டினமும் குறிக்கப்பட்டிருக்கிறது.
பெரிப்ளஸ் என்னும் நூலாசிரியர், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் கமரா, பொடுகா, சோபட்மா (Camara, Poduca, Sopatma) என்னும் துறைமுகப் பட்டினங்களைக் குறிப்பிடுகிறார்.