பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

களால் பெற்ற செயற்கை அழகும் கலந்து கண் டோரைப் பரவசப்படுத்தின. கோவலன் இயற்கையில் வடிவழகன். அவன் கொண்டிருந்த செயற்கைக் கோலம் பின்னும் அழகு செய்தது. “ஏற்ற மண மக்கள்” என்று கண்டோர் கூறிக் களிப்புற்றனர்.

குறித்த நேரத்தில் சடங்குகள் தொடங்கப் பெற்றன. வயதிலும் ஒழுக்கத்திலும் சனத்திர அறிவிலும் மிகவும் முதிர்ச்சிப் பெற்ற பார்ப்பான் சடங்குகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்விக்கத் தொடங்கினான். மணமக்கள் இருவரும் தீ வலம் வந்தனர். மகளிர் பலர் மணச் சடங்குகட்கு வேண்டிய மலர்களையும் வாசனைப் பொருட்களையும் பலவகைச் சாந்துகளையும் புகைப் போருள் வகைகளையும் பல பொடி வகைகளையும் விளக்குகளையும் பாத்திரங்களையும் தனித்தனியே ஏந்திப் பந்தரண்டை நின்றிருந்தனர். பிள்ளை களைப் பெற்று, வாழ்க்கை அனுபவம் மிகுந்த பெண்மணிகள், “கணவனும் மனைவியும் நிறைந்த அன்புடன் நீடுழி வாழ்க!” என்று மலர்களைத் தூவி வாழ்த்தினர். அத்துடன் மணவினை மங்கல முடிவு பெற்றது. மணத்திற்கு வந்திருந்தவர் அனைவரும், “சோழர் பெருமானான கரிகாலன் இமயத்தில் இருத்திய புலி முத்திரை அவ்விடத்தில நிலைபெற்று இருப்பதாகுக! அவனது ஒப்பற்ற அரச ஆழி வாழ்வதாகுக!” என்று வாழ்த்தினர்.[1]


  1. இவ்வாறு குடிமக்கள் தங்கள் சடங்குகட்கு இறுதியில் தங்கள் நாட்டு அரசனை வாழ்த்துதல் பண்டை மரபு.