பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கார்மேகம் போன்ற அவள் கூந்தல் தரையிற். புரண்டது. வீழ்ந்த கண்ணகி மயக்கம் தெளிந்து எழுந்தாள். அவள் கண்கள் சிவந்தன. அவள் தன் கண்கள் கலங்கும்படி கையால் மோதிக் கொண்டு அழுதாள்; “ஐயனே, நீ எங்கு இருக்கின்றாய்!” என்று வாய்விட்டு அழுதாள்; “பாண்டியன் தவறு செய்ததால் கணவனை இழந்தேனே! அந்தோ! அவன் இறந்தான் என்பது கேட்டு இன்னும் நான் இறக்கவில்லையே! அறக்கடவுளே, நீ உலகில் இருக்கின்றாயா? இந்த அநீதியைப் பார்த்துக் கொண்டா இருக்கின்றாய்? குற்றமற்ற என் காதலனைக் ‘குற்றம் உள்ளவன்’ என்று கோலை செய் வித்த பாண்டியன் செங்கோல் அரசனா? என்று பலவாறு புலம்பினாள். பிறகு கண்ணகி சூரியனைப் பார்த்து, “காய்கின்ற கதிர்களையுன்டய பகலவனே நீ அறிய என் கணவன் கள்வனா?” என்றாள். உடனே, “உன் கணவன் கள்வன் அல்லன்; அவனுக்குத் தவறு இழைத்த இவ்வூரை எரி உண்னும்,’ என்று ஒரு குரல் அங்குக் கூடியிருந்தோர் அனைவர்க்கும் கேட்டது.

பின்னர்ப் பத்தினியாகிய கண்ணகி தலைவிரி கோலமாக மதுரை நகருள் புகுந்தாள்; தெருக்கள் வழியே ஒற்றைச் சிலம்பைக் கையில் ஏந்திச் சென்றாள். சென்றவள். “மாநகரத்துப் பத்தினிகாள், என் கணவன் எனது காற்சிலம்பு ஒன்றை விற்க இந்நகரத்துக்கு வந்தான்; ம்திகெட்ட் பாண்டியனால் கொலை செய்யப்பட்டான். நான் என் காதற் கணவனைக் காண்பேன்; அவன் வாய்ச் சொல்லைக் கேட்பேன்,’ என்று பலவாறு புலம்பிக் கொண்டே போனாள்.