பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தினன். அவன் கோவலன்-கண்ணகி வரலாற்றைச் சேரனுக்கு விளங்கவுரைத்தான்; கோவலன் இறந்தது கேட்டு அவன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்தமையும் இருவர் தந்தையரும் துறவிகள் ஆன செய்தியையும் கூறினான்; மாதவியும் அவள் மகளான மணிமேகலையும் பெளத்த சமயத்தில் சேர்ந்து விட்டமையும் குறிப்பிட்டான்.

வஞ்சி மீளுதல்

சேரன்- செங்குட்டுவன் முப்பத்திரண்டு மாதங்கள் கழித்து வஞ்சி மீண்டான். அவன் வெற்றியுடன் திரும்பி வருவதை அறிந்த மாநகரத்து மக்கள் நகரை அலங்கரித்தனர்; பல வகை மங்கல ஒலிகளுக்கு இடையே அவனைப் பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அப்பேரரசன் சேரர் அரண்மனைக்குள் நுழையும் பொழுது யாவரும் வாழ்த்தி மலர்மழை பொழிந்தனர். உள் நுழைந்த சேரர் பெருமானை அரச மாதேவி அன்று அலர்ந்த மலர்களால் பாதபூசை செய்து வரவேற்றாள்.

கண்ணகிக்குக் கோவில்

கண்ணகித்தெய்வம் வந்து நின்ற மலையருகில் கோவில் கட்டப்பட்டது. இமயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சிலையில் பத்தினியின் திருவுருவம் செதுக்கப்பட்டது. உருவத்தின் அடியில பெயரும் பீடும் எழுதப்பட்டன. நல்ல நாளில், பத்தினிச் சிலை நாட்டப்பட்டது. அந்த நல்ல நாளில் அரசனது அழைப்புக்கு இணங்கிக் கடல்