பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

89


பக்கத்திலே வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக்
“கையினாற் பற்றிக்கரக ரெனத்தானிழுத்தான்,
“ஐயகோ வென்றே யலறியுணர்வற்றுப்
பாண்டவர்தம் தேவி யவள் பாதியுயிர் கொண்டுவர
நீண்ட கருங்குழலை நீசன் கரம் பற்றி
முன்னிழுத்துச் சென்றான் - வழிநெடுக மொய்த்தவராய் என்னகொடுமையிது வென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங்கீழ்மை யுரைக்கும் தரமாமோ?
வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துக் தராதலத்தில் போக்கியே
பொன்னையவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்

பெட்டைப் புலம்பல் பிறர்க்குத்துணை யாமோ?

என்று பாரதி கூறுகிறார்.

இளங்கோவடிகளும் பாரதியும், முறையே கண்ணகியின் கதரலைக் கேட்ட மதுரை மக்களையும் பாஞ்சாலியின் அழுகுரலைக் கேட்ட அத்தினாபுரத்து மக்களையும் நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

களம் வேறு, காலம் வேறு, மதுரையின் மன்னராட்சி, ஆயினும் அது செங்கோல் ஆட்சியாக அறநெறியின் பாற்பட்ட ஆட்சியாக இருந்தது அத்தினாபுரத்து ஆட்சியும் மன்னராட்சிதான். ஆயினும் அது துரியோதனனுக்கும் அவனுடன் சேர்ந்த உடன் பிறந்த நூற்றுவருக்கும் கட்டுப்பட்டு இருந்தது. மதுரை மன்னன் அவசரப்பட்டு ஆராயாமல் தவறிழைத்து விட்டான். அரசியல் பிழைசெய்து விட்டான். அதனால் அநீதியாகக் கண்ணகியின் கணவன் கொல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்து விட்டது. அத்தினாபுரத்திலே, திட்டமிட்டு கபடமாக சூதாட்டத்தை நடத்தி பாஞ்சாலியும் அவளது கணவன்மார்களும் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.