பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18. அழற்படுகாதையில்

கண்ணகியின் ஏவல்பெற்ற தீக்கடவுளின் எரியின் கூறுவெளிப்பட்டது. நகரைக் காக்கும் காவல் தெய்வங்கள் கோட்டை வாயில்களைக் காவாதொழிந்தன.

“ஏவல் தெய்வத்தெரி முகம் திறந்தது

காவல் தெய்வங்கடை முகம் அடைந்தன.”

என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

காவல் தெய்வங்கள் என்பது இந்திரன், இயமன், வருணன், சோமன் என்று உரையாசிரியங்கள் கூறுகிறார்கள். இவையெல்லாம் இந்து சமயம் கூறும் வேதகால தெய்வங்களாகும்.

நகரைப் தீப்பற்றிக் கொள்ள நால்வகை பூதங்களும் நகரைவிட்டு வெளியேறின என்று காப்பிய வரிகள் கூறுகின்றன.

“கோமுறை பிழைத்த நாளில் இந்நகர்
தீ முறை உண்பதோர் திறனுண்டென்ப
தாமுறையாக அறிந்தன மாதலின்
யாமுறைபோவதியல் பன்றோ வெனக்
கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்

நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக்”

என்பது காப்பியப் பாடல் வரிகளாகும்.

நமது மன்னன் செங்கோன்மையில் தவறின நாளிலேயே இம்மதுரை மாநகர் தீப்பற்றி எரியும் என்பதை நெறிமுறையென முன்பே நாம் அறிந்துள்ளோம். ஆதலால் நாமும் நமது காவலை விட்டுப் போவது இயல்பேயாகும் என்று தனது கொங்கையாலே நகரத்தை எரியூட்டிய நங்கையின் முன்பாகவே, நால்வகை பூதங்களாகிய நாம் நகர்க்காவலை விட்டு வெளியேறி விடுவோம்