பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கல வாழ்த்துப் பாடல் காதையில்

114


அறிந்தோ அறியாமலோ தவறாகக் கருதியோ பொறாமலோ, அரசனுடைய காவலர்கள் செய்யும் தவறுகளும் அரசனையும் அரசையுமே சாரும் என்பது இங்கு தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

அரசு செய்யும் தவறுகளையும் ஆட்சியில் நடக்கும் தவறுகளையும் கொற்றவை கோயிலில் முறையிடுவதும் அன்றைய பழக்கங்களில் ஒன்றாகும். கொற்றவை கோயிற் கதவுகளும் கொடுங்கோன்மை நிகழும்போது அடைபடுகின்றன. ஆட்சியில் தவறு ஏற்பட்டுவிட்டது என்பது தெரிந்தவுடன் அரசன் அந்தத்தவற்றைத் திருத்திக் கொள்வதும் அந்தத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்புக்கு ஈடுகட்டுவதும் அரசு நீதியின் ஒரு பகுதியாக அன்று இருந்திருக்கிறது.

தவறாக ஒருவனைச் சிறைப்படுத்திய காரணத்தால் அத்தவறுக்குத்திருத்தல் மட்டுமின்றி, பாதிப்புக்கு ஈடுகட்டுவது மட்டுமின்றி மேலும் ஒருபடி சென்று பாண்டிய மன்னன் சிறைக் கோட்டத்தைத் திறந்துவிட்டு காவலில் இருந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு கொடுத்து அவர்களை விடுதலை செய்யவும், இறை செலுத்த வேண்டியதை விடுவிக்கும்படியும், இடுபொருளாயினும் படுபொருளாயினும் அவை எடுத்தார்க்கும் கொண்டார்க்கும் உரிமையாகட்டும் என்றும் அரச நீதியாக அறிவிக்கவும் செய்தான் என்று காப்பியக் காதையால் அறிகிறோம்.

“சிறைப்படு கோட்ட ஞ்சீமின் யாவதுங்
கறைப்படுமாக்கள் கறை விடு செய்ம்மின்
இடுபொருளாயினும் படு பொருளாயினும்
உற்றவர்க்குறுதி பெற்றவர்க்காமென
யானை யெருத்தத்து அணி முரசு இரீஇக்
கோன் முறையறைந்த கொற்ற வேந்தன்

தான்முறை பிழைத்த தகுதியும் கேள்நீ”

என்று குறிப்பிடுகிறது காப்பிய வரிகள்.