பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. மனையறம் படுத்த காதையில்

இக்காதையில் மூன்று முக்கிய கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன.

ஒன்று, கண்ணகியின் அழகிய நுதலுக்கு இறைவனின் பிறை மதியையும், இடைக்கு இந்திரனுடைய வஜ்ஜிரப் படையையும், விழிகளுக்கு முருகனுடைய வேல் படையையும் ஒப்பிட்டுக் கூறுகிறார் அடிகளார். இதில் இறைவனே தனது பிறை மதியைக் கண்ணகியின் நுதலுக்காகக் கொடுத்தான் என்றும், இந்திரனே முன்வந்து தனது தெய்வக்காவல்படையைக் கண்ணகியின் இடைக்காகக் கொடுத்தான் என்றும் ஆறுமுகனே தனது சுடர் நெடுவேலை கண்ணகியின் கண்களுக்காக இரண்டாக ஈந்தான் என்றும் குறிப்பிடுவது சிறப்பாகும்.

இங்கு பிறை சூடிய இறைவனும், தெய்வீகக் காவல் படையைக் கொண்ட இந்திரனும் நெடிய கூர்மையான வேல் படையைக் கொண்ட முருகனும் நமக்குக் காட்டப்படுகிறார்கள்.

“குழவித்திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருனமத்தாயினும்
உரிதின் நின்னோடுடன் பிறப்புண்மையின்

பெரியோன் தருக திருநுதலாகென”

என்றும்

“மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்

படை நினக்களிக்க வதனிடை நினக்கிடையென,

எனவும்

“ஆறுமுக ஒருவனோர் பெறு முறையின்றியும்
இறு முறைகாணும் இயல்பினின் அன்றே
அருஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின்முகத்துச்

செங்கடை மழைக்கண் இரண்டா வீத்தது”

எனவும் இளங்கோவடிகள் ஒப்பிட்டுக் கூறுவது சிறப்புமிக்கதாகும்.