பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனையறம் படுத்த காதையில்

22


இரண்டாவதாக, அடிகளார், வணிகர் பெருமக்கள் பொருளீட்டுவது குறித்துக் குறிப்பிடும்போது குலவொழுக்கம் பற்றியும் அற வழியில் பொருளிட்டுவதாகவும் குறிப்பிடுகிறார். வணிகப் பெருமக்களின் குலவொழுக்கமாகிய தொழில் ஒழுக்கம் அறவழியில் பொருளீட்டுவதாகும் என்னும் கருத்தை சிலப்பதி காரக் காப்பியம் எடுத்துக் கூறுவது இன்னாள் வாணிபத்திற்கும் மிகவும் பொருந்துவதாகும்.

வணிகர்களில் குல ஒழுக்கத்தைப் பற்றி

“நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற
நன்னைஞ்சினோர், ஒடுவஞ்சி வாய்
மொழிந்து, தமவும் பிறவும் ஒப்ப
நாடிக் கொள்வதாம் மிகை கொளாது
கொடுப்பதுஉங் குறை கொடாது

வாணிபம் செய்தலாகும்”

எனப்பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. இந்த வாணிப நெறிமுறை இன்றைய சமுதாயச் சீர் ஒழுக்கத்திற்கு எத்தனை தேவைப்படுகிறது என்பது நன்கு விளங்குவதாகும்.

“குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவ முடித்தோர்
உத்தரகுருவின் ஒப்பத் தோன்றிய

கயமலர்க்கண்ணியும் காதற் கொழுநனும்”

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்

வணிகர்களின் குல ஒழுக்கத்தில் குன்றாக உள்ள நற்குடியினராகிய செல்வர்கட்கு அங்ஙனம் அறத்தின் ஈட்டிய பொருள்களாலே தலைப்பழு தானத்தைச் செய்தோர் எய்தும் உத்தர குருவை (போக பூமியை) அந்நகர் (புகார் நகரம்) ஒக்கும் படி தோன்றிய பெரிய மலர் போலும் கண்ணினை உடையாளும் (கண்ணகியும்) அவளால் காதலிக்கப்டும் கொழுநனும் (கோவலனும்) என்பது அவ்வரிகளின் பொருளாகிறது.