பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

29


விழாவை மய்யமாக வைத்து மக்களின் பல்வேறு வழிபாடுகளும், கேளிக்கைகளும், விளையாட்டுகளும், விழாக்கோலங்களும் படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. புகார் நகரப் பகுதிகள், வீதிகள், மக்கள், மக்கள் பிரிவுகள் முதலியோர்களின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் விரிவாகக் காப்பியத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்து சமயம் மிகவும் விசாலமானது. மிகவும் விரிவானது மிகவும் பரந்த வழிபாட்டு முறைகளைக் கொண்டது. இக்காலச் சொல் முறையில் கூறுவதானால் மிகப்பரந்த வழிபாட்டு சுதந்திரம் கொண்டது என்று கூறலாம். இந்து சமயக் கோயில்கள் பலவும் கூட வெறும் வழிபாட்டு நிலையங்களாக மட்டும் அல்லாமல் மக்கள் கூடும் சபைகளாகவும், சபா மண்டபங்களாகவும் பலவேறு நூல்களையும் கலைகளையும் கற்கும் கல்வி நிலையங்களாகவும் பல்கலைக் கழகங்களாகவும் கோட்டைகளாகவும் விளங்கியிருக்கின்றன.

உலகனைத்தையும், உலகப் பொருள்கள் அனைத்தையும் தெய்வ வடிவங்களில் காணும் தத்துவங்கள் நிறைந்த வேதங்கள், உபநிடதங்கள், சூத்திரங்கள், சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், நிறைந்த வாழ்க்கை நெறிமுறையின் வழிகாட்டியாக இந்து சமயம் இருப்பதால் குலதெய்வங்கள், இஷ்ட தெய்வங்கள், சிறு தெய்வங்கள், வனதெய்வங்கள், காவல் தெய்வங்கள், மற்றும் இயற்கை சக்திகளின் வடிவிலான பல வேறு தெய்வங்களும், அவற்றிற்குரிய வழிபாடுகளும், விழாக்களும் நிறைந்துள்ளன. மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான மனித வாழ்க்கையுடன் நெருக்கமான தொடர்பும் இணைப்பும், பரஸ்பர சார்பும் கொண்டுள்ள உயிரினங்கள், பூத சக்திகள், தாவர இனங்கள், விலங்கினங்கள், பறவை இனங்கள் முதலியனவும், தெய்வீக சக்தியாக மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. அந்த வழியில் மனிதன் உருவாக்கிய தொழில்களும் கலைகளும் இலக்கியங்களும் தெய்வீகத் தன்மையுடன் பயிலப்பட்டு பேணிகாத்து வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய விரிவினை, விரிவின் பகுதிகளை இக்காதையில் காணலாம்.