பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொலைக்களக்காதையில்

72



இதுவே சிலப்பதிகாரப் பெருங்காப்பியம் உலகோருக்கு வற்புறுத்திக் கூறும் மிக முக்கிய அறிவுரைகளில் முக்கியமான ஒன்றாகும்.

காரணமும் விளைவும் என்பது தத்துவ ஞானக் கூறுகளாகும். பாண்டியன் அரசியலில் பிழை செய்தான். அதன் விளைவாக அவனது செங்கோல் வளைந்தது. அதற்குக் கோவலன் காரணமாகிறான். கோவலன் தனது பழ வினையால் மதுரையில் கொலையுண்டான். அதற்குப் பாண்டிய மன்னன் காரணமாகிறான். எனவே தீவினைகளை ஒழித்து நல்வினைகளைக் காணுங்கள் என்று சிலப்பதிகாரச் செய்தி கூறுகிறது.

பெருமழைப்புலவர் உயர்திரு போ.வே.சோமசுந்தரனார் அவர்கள் தனது விளக்கவுரையில்:

"பாண்டியன் முற்பகலில் தன் அரசியிலில் பிழைத்துச் செய்த தீவினை பிற்பகலே வந்தெய்தி அவனது செங்கோலை வளைத்தது. கண்ணகி கேள்வன் முற்பிறப்பில் செய்த தீவினை இப்பிறப்பில் வந்து அவனைக் கொலைக் களத்தே வீழ்த்தியது. அவ்வாறு வீழ்த்தும் போது அதற்குக் கருவியாக அப்பொழுது பிழை செய்த பாண்டியனைக் கருவியாக்கிக் கொண்டது. பாண்டியன் கோலை வளைக்கக் கோவலனைக் கருவியாக்கிக் கொண்டது. இங்ஙனம் கோடல் ஊழின் இயல்பு என்றவாறு இவ்வுண்மையை உணர்ந்து கொள்மின்! தீவினையை விட்டொழிமின்! இங்ஙனமே நல்வினையின் பயன் நன்மை யாகவே வந்தெய்தும். ஆதலால் நல்லறமே நண்ணுமின் என்றவாறு" என்று கூறுகிறார்கள்.

மேலும் எதையும் ஆராய்ந்து செய்தல் வேண்டும் என்பதும் இக்காதையின் முக்கிய படிப்பினையாகும்.