பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14. ஆய்ச்சியர் குரவைக் காதையில்

சிலப்பதிகாரப் பெருங்காப்பியத்தில் வரும் ஆய்ச்சியர் குரவைப் பாட்டுகள் மிகவும் அருமையான உள்ளத்திற்கினிய பாடல்களாகும். தனித்தன்மையான, சிறப்பு மிக்க பக்திச் சுவைமிக்கப் பாடல்களாகும். இந்தப் பாடல்கள் தனிக் காதையாக அமைந்து காப்பியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இப்பாடல்கள் திருமாலின் சிறப்புகளைப் பாடும் சிறந்த கவிதைகளாகும். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஈடாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. இவை முன்னிலையாகவும் படர்க்கைப்பாடல்களாவும் பாடப்பட்டிருக்கின்றன.

ஆயர் குலமக்கள் கண்ண னைப் பாடும் அழகு தனிச்சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. திவ்யப்பிரபந்தப் பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தள்ளது. நாட்டுப் புறப்பாடல்களின் சாயல் அவைகளில் காணப்படுகிறது. இந்து சமய பக்தி நெறியின் வழிபாட்டு முறைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் மிகவும் சிறப்பாக இளங்கோவடிகளார் இப்பாடல்களை நமக்கு அளித்துள்ளார்கள். இப்பாடல்கள் நமது நெஞ்சத்தைத் தொடுகின்றன. இவை ஆயர்குல மக்களிடம் இயல்பாய் எழுந்துள்ள சொற்களாக அனைவருக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளன.

கோவலன் கொலையுண்டான், அந்த செய்தி ஆயர்பாடிக்கு இன்னும் தெரியாது. ஆயினும் பல தீய நிமித்தங்கள் தென்படுகின்றன. பல வகை உத்பாதங்கள் நிகழ்கின்றன. தங்கள் (சேரிகளில் உத்பாதங்கள் நிகழும் போதும் தீய நிமித்தங்கள் தென்படும் போதும் தங்கள் குடியிருப்புகளையும் ஆநிரைகளையும் காத்தருளுமாறு தங்கள் குல தெய்வங்களான கண்ணனையும் பலராமனையும் வேண்டுதல் செய்து ஆயர்பாடிப் பெண்கள் குரவைக் கூத்து வகையில் கூட்டாகச் சேர்ந்து பாடுவது வழக்கமாகும். அந்த வகையில் சிலப்பதிகாரக் காப்பியத்திலும் ஆய்ச்சியர் குரவைப் பாட்டுக்கள், ஆயர்குல தெய்வத்தின் மீதான கூத்துப் பாடல்களாகக் கூறப்பட்டுள்ளன.