பக்கம்:சிலம்பின் கதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

சிலம்பின் கதை



கொலைப்படும் மகன் அல்லன்” என்று அவர்களுள் ஒருசிலர் மறுப்புத் தெரிவித்தனர். அவர்கள் உண்மை ஒளி காண்பதற்குமுன் கொல்லன் அவர்களைத் தனியே அழைத்துப் பேசினான்; அவர்கள் கூற்றை எள்ளி நகையாடினான். “கள்வர் என்பவர் கடுமையான தோற்றம் கொண்டிருக்கத் தேவையில்லை; அவர்கள் மற்றவர்களை எளிதில் மயக்கும் ஆற்றல் உடையவர்கள்; அந்த மயக்கத்தில் இவர்கள் ஆட்படுதல் கூடும்” என்று விளக்கினான்.

“களவாடுபவர்கள் மந்திரம் கற்றவர்கள்; தெய்வத்தை வேண்டி ஆற்றல் பெற்றவர்கள், மருந்திட்டு மற்றவர்களை மயக்குபவர்கள்; நிமித்தம் அறிந்து செயல்படுவார்கள்; தந்திரமாகச் செயல்படுவர்; இடம், காலம், கருவி ஆராய்ந்து சிந்திப்பவர்கள்; அதனால் அவர்களை அடையாளம் காண்பது அரிது ஆகும்” என்றான்.

“மருந்திட்டு அதனால் மயங்குவீர் என்றால் மன்னவன் ஆணைக்கு நீர் ஆட்படுவீர்; உங்கள் தலைகள் உருள்வது உறுதி; அவர்கள் மந்திரத்தைச் சொன்னால் தேவகுமாரர்கள் போல் மறைந்துவிடுவர். தெய்வத்தை நினைப்பவர் ஆயின் தம் கையகத்து உள்ள பொருளை அவர்களால் மறைக்க இயலும்; அவர்கள் மந்திரம் போட்டால் நாம் மறைந்து இருந்த இடத்தை விட்டுப் பெயரவே இயலாது. நிமித்தம் பார்த்தே திருடுவதை அவர்கள் நியமித்துச் செயல் படுவர். களவு நூல் காட்டும் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் இந்திரன் ஆரமும் அவர்கள் கைக்குச் சென்று போய்ச் சேரும். இடம், காலம் கருதி அவர்கள் செயல்பட்டால் யாரும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்குப் பகல் இரவு என்ற நேரப்பாகுபாடு இல்லை”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/111&oldid=936428" இலிருந்து மீள்விக்கப்பட்டது