பக்கம்:சிலம்பின் கதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

சிலம்பின் கதை



குதிரை வீரர், யானைப்பாகர், தேர் ஊர்வோர், வாள் மறவர்கள் இவர்களும் செயலற்று நின்றனர். அவர்களும் நெருப்பைக் கண்டு அஞ்சி அகன்றனர்.

இந்த நகரைக் காத்துவந்த பூதங்கள் நகரைவிட்டு நீங்கின் அந்தண பூதமாகிய ஆதிப்பூதம், அரச பூதம், வணிகப்பூதம், வேளாண் பூதம் இவை நான்கும் இனி அங்கு இருந்து பயனில்லை என்பதால் நீங்கிவிட்டன. கண்ணகியின் கடுஞ்சூள் இது. அதனைத் தடுக்க இயலாது. என்பதை அவை உணர்ந்தன. சந்திக்கு ஒரு பூதம் என அந் நகரைக் காத்து வந்தன. அவை நீதிக்கு அடிபணிந்து நாட்டை விட்டு நீங்கின.

அந் நகரத்து வீதிகள் அனைத்தும் அழிந்தன. கூலமறுகு, கொடித்தேர்வீதி, சாதிகளின் பெயரால் பாகு படுத்தப் பட்ட விதிகள் இவை காண்டீபன் வில்லுக்கு எரிந்த காண்டவ வனம் போல் அழிந்தன. காண்டவ தகனம் என இம் மதுரை எரிந்து சாம்ப்லாயிற்று, நல்லோர் மட்டும் விதிவிலக்கு ஆயினர். அறவோரை அழிக்காமல் மறவோரை மட்டும் மாய்த்தது.

கன்றுகளும், பசுக்களும், ஆயர்தம் தெருக்களை அடைந்தன. யானைகளும், குதிரைகளும் நகரின் மதிலுக்குப் புறமாகச் சென்று உயிர் தப்பின. மகளிர் காமக் களியாட்டம் செய்வதை விடுத்து உயிருக்குப் பாதுகாப்புத் தேடினர். தாயர்கள் தம் குழந்தைகளைத் தட்டி எழுப்பி முதிய பெண்டிருடன் தப்பி ஒதுங்கினர். அவர்களை நெருப்புத் தீண்டவில்லை.

பாராட்டுரை

அறம் வழுவாத கற்புடைய மாதர் அனலைக் கண்டு

கலங்கவில்லை. “கண்ணகி தீ மூட்டியது தவறு அல்ல” என்று பேசினர்; அவள் செய்கையை வாழ்த்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/133&oldid=936452" இலிருந்து மீள்விக்கப்பட்டது