பக்கம்:சிலம்பின் கதை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழற்படு காதை

133



ஆடு அரங்குகளில் கலை நிகழ்ச்சிகள் நின்று விட்டன; அவர்கள், “வந்தவள் யார் ? எந் நாட்டவள் ? அரசனை எதிர்த்து வென்று தீ மூட்டினாள்; அவள் வியப்புக்கு உரியள்” என்று அவர்கள் நயப்புடன் உரை நிகழ்த்தினர். ஊரில் விழாக்கள் நின்றன; வேத முழக்கம் நின்றது; செந் தீ வேட்டலும், தேவபாடலும், மகளிர் மங்கல விளக்கு ஏற்றிவைப்பதும், மாலை மகிழ்வும், முரசு அறைவும் நின்று விட்டன.

அவல நிலை

கண்ணகி என்ன ஆயினாள்? அவள் நிலை யாது? காதலனை இழந்த துன்பம் அதற்குக் கரையே காண இயலவில்லை. கொல்லன் துருத்திபோல் வெய்து உயிர்த்தாள். மறுகுகளில் மறுகினாள்; கவலை கொண்டாள்; நடப்பாள்; திடீர் என நிற்பாள்; மயங்குவாள்; தெளிவு பெற்றவள் போல் நடப்பாள் மிக்க துன்பம் உற்ற வீரபத்தினியாக நின்றாள்.

அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப் பெரும் தெய்வங்கள் என அவளை மதித்து மதுராபதி தெய்வம் போற்றியது. நெருப்புக்கு அஞ்சி அவளை அடைக்கலமாகப் பின் வந்து நின்றது.


23. விதிப்பயன் எனல்
(கட்டுரை காதை)

மதுரைத் தெய்வம்

மதுரை நகர் ஒரு மங்கை வடிவம் கொண்டு கண்ணகியின் பின்புறம் வந்து நின்றது. சடைமுடி தரித்திருந்தாள். சிவனைப்போல் பிறை தரித்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/134&oldid=936453" இலிருந்து மீள்விக்கப்பட்டது