பக்கம்:சிலம்பின் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கல வாழ்த்துப் பாடல்

15



இரண்டாக உடைத்து அவற்றைக் கண்கள் இரண்டாக அமைத்து விட்டான்” என்று பேசினான்.

அவன் கற்பனைகள் எங்கெங்கோ செல்கின்றன. அவள் சாயல் மயிலை நினைப்பூட்டியது; நடை அன்னத்தைக் காட்டியது; இனிய மொழி கிளியை அழைத்தது.

“அவள் சாயல் கண்டு அதற்குத் தோற்று மயில் காடுகளை அடைந்துவிட்டது; அவள் நடைக்கு அன்னம் தோற்று நன்னீர்ப் பொய்கையை அடைந்துவிட்டது. அமிழ்தும் யாழும் குழைத்த அவள் இனியதொரு கிளவி கேட்டுக் கிளி வருந்துகிறது. முழுமையாகக் கற்றுக்கொள்ள அவளை விட்டு நீங்காமல் உடன் உறைகிறது”என்று பாராட்டினான்.

“தோழியர் அவர்களுக்குக் கோலம் செய்தவர்கள் மாபெரும் தவறு செய்து விட்டார்கள்” என்று பேசுகிறான். “மங்கலத்தாலி அது ஒன்று போதும். பிங்கல நிகண்டுபோல் அவர்கள் பிற அணிகள் அணிவித்தது ஏன்?” என்று கேட்கிறான்; “முலைத் தடத்திடை அவர்கள் அலைத் திடல் என எழுதிய தொய்யில் போதுமே” என்றான். “முத்து ஆரம் ஏன் அணிவித்தனர்” என்று கேட்கிறான். “நகை அது மிகை” என்று கூறி அவன், “அழகுக்கு அழகு செய்வது வீண்” என்கிறான்.

பின் அவளைத் தொடர்ந்து மேனி அழகைக் காண்கிறான்; “பொன்னே” என்கிறான். தொட்டுப் பார்க்கிறான்; “வலம்புரி முத்து” என்கிறான். நுகர்வில் கண்ட இன்பம் அதனால் அவளை “நறு விரை” என்கிறான். இதழ்ச் சுவையால் “கரும்பு” என்கிறான். மொழிச் சுவையால் “தேன்” என்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/16&oldid=958907" இலிருந்து மீள்விக்கப்பட்டது