பக்கம்:சிலம்பின் கதை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடுகற் காதை

171


யில் வேள்வியை அமைதியாக இயற்ற வழி வகைகள் செய்யுமாறு ஏவினான்.

அற வாழ்வில் அடியெடுத்து வைத்த அரசன் செங்குட்டுவன் முதற்கண் சிறைப்பட்டுக் கிடந்த ஆரிய மன்னர் ஆகிய கனக விசயரை விடுவித்து அவர்களை விருந்தினராக ஏற்றுப் பூம்பொழில் சூழ்ந்த மாளிகை ஒன்றில் தங்க வைத்தான்; “வேள்விக்கோ என்று அம்மாளிகை பெயர் பெற்று விளங்கியது; “வேள்வி முடிந்ததும் அவர்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்லலாம்” என்று வேண்டி உரைத்தான். பகைவர்கள் அவனுக்கு நண்பர்கள் ஆயினர். அந்நியர்கள் அவனுக்கு மன்னிய விருந்தினர் ஆயினர்; “அவர்க்கு ஆவன செய்க” என்று அமைச்சனான வில்லவன் கோதைக்கு நல்லுரை கூறினான்.

சிறைப் பட்டுக் கிடந்த சிறுமையோரை விடுதலை செய்யுமாறு ஆணை இட்டான். மற்றும், “பிறநாட்டு அரசர்கள் வந்து குவிக்கும் திறைப் பொருள் இனித் தேவை இல்லை” என்று கூறித் தவிர்த்தான். மக்களுக்கு வரிகள் விலக்கு அளித்தான். இறை செலுத்துவதிலிருந்து அனை வருக்கும் விலக்கு அளித்து அவர்களைப் பெரு மகிழ்வு கொள்ளச் செய்தான். இப்பணியினை அழும்பில் வேள் என்னும் அமைச்சனிடம் ஒப்புவித்தான்.

கோட்டம் அமைத்தல்

அதன் பின் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்தான்; கண்ணகி வாழ்வு மூன்று பேருண்மைகளை விளக்கிக் காட்டியது. அவள் கற்பின் பெருமைக்குக் காரணம் அவள் வளர்ப்பு முறை; அவள் பிறந்த நாட்டின் பின்புலம்; கற்பு சிறப்பதற்கு அரசு நன்கு அமைந்து இருந்தது; கண்ணகி தன் கற்பின் திறத்தால் சோழ அரசன் நல்லாட்சியை உலகுக்கு அறிவிக்க இயன்றது; இது ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/172&oldid=936492" இலிருந்து மீள்விக்கப்பட்டது