பக்கம்:சிலம்பின் கதை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

சிலம்பின் கதை



சார்கிறது. 'கலை கலைக்காகவே' என்பது அவள் நோக்கமன்று. கலை வாழ்க்கைக்காக என்பது அவள் நோக்கம்; அதனால் பரிசில் பெறுவது, செல்வம் குவிப்பது அவளுக்குத் தேவையாகின்றன.

இளமையில் அழகும் கவர்ச்சியும் இருக்கும்போதே பொருள் ஈட்டிக் குவித்துக் கொள்ள வேண்டும். அது அவள் வாழ்க்கை நிலை.

உழைத்து வாழ்பவர் உழவர்கள்; தொழிலாளர்கள். வணிகர்கள் இதுபோன்றே நேரடி உழைப்பில் ஈடுபடு பவர்கள். தலைமை ஏற்பதால் சிறப்புப் பெறுபவர் அரசர்கள். 'அழகுப் பசி' அதற்கு மறுபெயர் 'கலை'; அதனை நிறைவேற்றித் தருபவர்கள் கலைஞர்கள்.

கதைகள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் நல்ல கருத்துகளை நாட்டுக்குப் பரப்புபவர்கள் இவர்கள். இவர்களை உலகம் மதிக்கிறது; பாராட்டுகிறது; பரிசும் தருகிறது. ஆனால் அன்பு காட்டி அவர்களை நேசிப்பது இல்லை; அதுதான் அவர்கள் அடையும் தோல்வியும்கூட

கோவலனை இவள் தேடிக் கொள்ளவில்லை. குலுக்கல் முறையில் கிடைத்த பரிசு; அவன் விலை கொடுத்து வாங்குகிறான். அவள் அவனுக்கு அடிமை ஆகிறாள். அவளோடு வாழ்வதற்கு உரிமைப் பதிவு பெறுகிறான். அவனை மகிழ்விப்பது அவள் தொழில் ஆகி விடுகிறது. அதுவே வாழ்க்கையாகவும் மாறி விடுகிறது.

மற்றைய பெண்களைப் போல இவள் கண்ணியமாக வாழ முயல்கிறாள்; தன்னை அணுகுபவனின் அன்பைப் பெற முயல்கிறாள். அதனை அவளால் பெற முடியவில்லை. அதுதான் அவளைப் பற்றிய முடிந்த நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/197&oldid=936518" இலிருந்து மீள்விக்கப்பட்டது