பக்கம்:சிலம்பின் கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சிலம்பின் கதை



களித்துயில் எய்தினர். அந்த இரவு அவர்களுக்கு இன்பத்தைத் தந்தது. அவர்கள் நறுமணம் கொண்டு தம்மை அழகுபடுத்திக் கொண்டனர். பூக்கள் அணிந்து பொலிவுடன் திகழ்ந்தனர்.

கண்ணகி கடுந்துயர்

கண்ணகி தனிமையில் வாடினாள்; அவளுக்கு வாழ்க்கை கசந்தது. அழகு ஊட்டும் அணிகள் அவளுக்குச் சுமையாயின. காலில் அணிந்திருந்த சிலம்பு அதைக் கழற்றி வைத்தாள். குங்குமம் அப்பிக் கொங்கைகளை அழகுபடுத்துவதை நிறுத்தி விட்டாள்; தாலி அது மங்கல அணியாதலின் அது மட்டும் தங்க இடம் தந்தாள். ஏனைய அணிகள் அவளை விட்டு நீங்கின. காதில் அணிந்திருந்த தோடும் அது கேடுற்றது.

அவள் நெற்றி அவன் கூடி இருந்தபோது வியர்த்து மகிழ்வைப் புலப்படுத்தியது. அந்த வியர்வை அவளை விட்டுப் பிரிந்தது.

அஞ்சனம் கண்களுக்குக் கருமை தந்தது. அதனைத் தீட்டுவதை விட்டாள்; திலகம் இட்டு நெற்றியை முன்பு அழகுபடுத்துவாள்; அது அவள் நெற்றியை விட்டு நீங்கிவிட்டது. அவள் சிரிப்பு கோவலனுக்கு மகிழ்ச்சியின் விரிப்பு; அதை அவன் இழந்துவிட்டான்.

கூந்தல் வாரி முடித்து மலர் இட்டு மகிழ்ந்திலள்; அது நெய்யணிதலும் இழந்து வறண்டு உலர்ந்து கிடந்தது. கையறு நெஞ்சோடு அவள் வருந்திச் செயல் இழந்தாள். அடி முதல் முடி வரை அவள் ஒப்பனைகள் வெறும் சொப்பனமாக மறைந்தன. சோகத்தின் உருவமாக அவள் சோர்ந்து கிடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/23&oldid=959695" இலிருந்து மீள்விக்கப்பட்டது