பக்கம்:சிலம்பின் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடல் ஆடு காதை

33



கண்கொள்ளா இக் காட்சியைக் கண்டு களிமகிழ்வு உற்றனர்.

மாதவியின் ஆடல் நிகழ்ச்சிகள்

மாதவியின் ஆடல் அரங்கு தொடங்கியது; முதல் நிகழ்ச்சியாகத் தெய்வப் பாடல்களைப் பாடினர். திருமாலின் புகழைப் பாடினர். இது ‘மாயோன் பாணி’ எனப்பட்டது.

இவ்வாறே நால்வகை வருணப்பூதர் புகழைப் பாடினர். அதன் பின் திங்களைப் போற்றிப் பாடினர். இது 'வானூர் மதியம்பாணி' எனப்பட்டது.

அதன் பின் கதை பொதிபாடல்களைப் பாடினர். இவை தெய்வங்கள் மானிடர் நன்மைக்காக உலகில் ஆற்றிய போர் நிகழ்ச்சிகளைச் சித்திரித்துக் காட்டின. தெய்வக் கதைகள் இதில் இடம் பெற்றன.

சிவன் திரிபுரம் எரித்த உடன் பார்வதியோடு சுடுகாட்டில் ஆடிய ஆட்டம் ‘கொடிகொட்டி’ எனப்பட்டது.

கலைமகன் பிரமன் காணத் தேர்முன் ஆடியது ‘பாண்டரங்கம்’ எனப்பட்டது.

கம்சனைத் துவம்சம் செய்த கண்ணன் அவனைக் குத்தி வீழ்த்திய நிகழ்ச்சி ‘அல்லியத் தொகுதி’ எனப்பட்டது.

கண்ணன் தன்னை எதிர்த்த வாணா சூரனை எதிர்த்து அவனைக் களத்தில் வீழ்த்திய செய்தி ‘மல்லின் ஆடல்’ எனப்பட்டது.

கடலில் சூரபதுமனை எதிர்த்து முருகன் போர் தொடுத்தான். அதைச் சித்திரித்துக் காட்டியது ‘துடிக்கூத்து’ எனப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/34&oldid=963703" இலிருந்து மீள்விக்கப்பட்டது