பக்கம்:சிலம்பின் கதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேடுவ வரி

73


பெருமாட்டி என்றும், நெற்றிக் கண் படைத்த தெய்வம் என்றும், பவளவாயினை உடையவள் என்றும், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள் என்றும், சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள் என்றும், காலில் சிலம்பும் வீரக்கழலும் அணிந்தவள் என்றும், கொற்றம் தரும் வில்லை ஏந்தியவள் என்றும், மகிடாசுரனை வென்று அவனை அடக்கி அவன் முடிமீது அடிவைத்து ஆடியவள் என்றும், அவ்வாட்டத்தில் அவன் தலைவேறு உடல் வேறு என இருவகைக் கூறுபட்டது என்றும், இன்னும் அமரி குமரி எனப் பல்வேறு பெயர்களில் அழைத்தனர். அந்தக் குமரிப்பெண் கொற்றவை கோலத்தில் இருந்து அவர்களுக்கு அருள் செய்தனள். இனி வரிப் பாடல்கள் பாடலாம் என்று அவள் ஆணையிட்டனள்; அதனைத் தொடர்ந்து அவர்கள் பாடத் தொடங்கினர்.

ஐயை கோயில் முற்றத்தைப்பற்றி முதற்கண் பாடினர். “ஆங்கு நாகம், நரந்தம், ஆச்சா, சந்தனம், சே, மா இம்மரங்கள் செறிவு பெற்றன”.

“வேங்கை, இலவம், புன்குமரம் இவை பூக்களைச் சொரிந்து அழகுபடுத்தின”.

“மரவம், பாதிரி, புன்னை, குரவம், கோங்கம் இவை மலர்ந்தன; இவற்றின் கொம்புகளில் வண்டுகள் ஆர்த்தன; அவை யாழ்போல் ஒலி செய்தன” என்று பாடினர்.

அடுத்து அவர்கள் வேடுவர் தம் குலத்தைச் சிறப் பித்துப் பாடினர்.

“கொற்றவை கோலம் கொண்ட இப்பொற்றொடி மாது மிக்க தவம் செய்தவள்; அவள் பிறந்த குலம் அவளால் பெருமை பெற்றது.”

அடுத்துக் கொற்றவையைச் சிறப்பித்துப் பாடத் தொடங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/74&oldid=964166" இலிருந்து மீள்விக்கப்பட்டது