பக்கம்:சிலம்பின் கதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் காண் காதை

93



என வகை செய்யப்பட்ட பொன் வகைகள் அங்குக் கிடைத்தன; கொடிகள் கட்டி இவற்றை அறிவுறுத்தினர்.

அடுத்தது அவன் கண்டது துணிவகைகள் விற்பனை செய்த வீதியாகும். பருத்தி நூலாலும், எலிமயிராலும், பட்டு நூலாலும் நுட்பமாக நெய்யப்பட்ட துணிவகைகள் பல நூறு எண்ணிக்கையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அடுத்து அவன் கண்டது கூலமாகப் பண்டங்களைக் குவித்துவைத்த நவதானியக் கடை வீதியாகும். இங்குக் குறிப்பிடத்தக்கவை அவர்கள் அளக்கும் கோல்களாகும். நிறுத்தும் கோல் நிறைக்கோல் எனப்பட்டது. பறை என்பது பருத்த உள் அறையை உடைய அளக்கும் கருவி என்று கூறலாம்; மற்றொன்று அம்பணம் எனப்பட்டது; அது மரக்கால் வகையாகும். இவற்றைக் கொண்டு தானியங் களை அளந்து கொட்டி விற்றனர். இவ் அளவு கோல்களைத் தாங்கிக் கொண்டு இவ்வணிகர்கள் அங்கும் இங்கும் திரிந்து இயங்கினர்; மிளகு முட்டைகள் பல இங்குக் குவிக்கப்பட்டிருந்தன. கால வரையறை இன்றி இங்கு வாணிபம் நடைபெற்றது.

நகர்த் தெருக்கள்

சாதி அடிப்படையில் தெருக்கள் பகுக்கப்பட்டு விளங்கின. நால்வகைச் சாதியர் தனித்து அறியப்பட்டனர். அரசர், அந்தணர், வணிகர், உழவர்கள் என்போர் ஆவார். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் பெருந்தெருக்கள் எனலாம். மற்றும் சந்துகள், சதுக்கங்கள், ஆவண வீதிகள், மன்றங் கள், கவலைகள், மறுகுகள் எனத்தெருக்கள் பலவகைப் பட்டு இருந்தன. இங்கெல்லாம் திரிந்து அந் நகரைச் சுற்றிப் பார்த்தான். கதிர்கள் நுழையாதபடி அங்கு எடுத்த கொடிகள் பந்தல் இட்டது போல் நெருங்கிப் பறந்தன. அவை செல்வார்க்கு நிழலைத் தந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/94&oldid=936407" இலிருந்து மீள்விக்கப்பட்டது