பக்கம்:சிலம்புத் தேன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகாவித்துவான் சிந்தாமணிச் செல்வர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை அவர்கள்

அணிந்துரை

'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சிலப்பதிகாரத்தின் சீர்மையைத் தம் பாட்டிடை வைத்துப் பாராட்டினர் புதுமைக் கவிஞர் பாரதியார். ஆயினும், இவ்வுண்மையை ஆய்ந்து அறிந்த அறிஞர் தமிழருள் ஒரு சிலரே என்பது மிகையாகாது. அவ்வொரு சிலருள் 'சிலம்புத்தேன்' தந்த செஞ்சொற் புலவர் ந. சஞ்சீவியும் ஒருவர் என்பதைச் சிலம்புத்தேனைக் சுவைத்தறிவார் இனிதுணர்வர் என்பது ஒருதலை.

பண்டைக் கவிஞர்கள் இயற்றிய பழுதறு காப்பியங்களின் ஏடுகள் பபரண்களை விட்டிறங்கிக் கற்றார்க்குக் காட்சியளிக்கச் செய்த பெருமக்கள் என்றும் அறிஞர் பாராட்டுக்கு உரியவர்கள் என்பதில் ஐயமின்று ; அக்காப்பியங்களின் சுவையைத் தாம் கண்டறிந்த அளவு பிறரும் கண்டு களிக்கச் செய்த நல்லுபகாரிகள் உரையாசிரியர்கள் ; அவ்வுரை நுட்பங்களை உள்ளவாறுணர்ந்து தம் சொல்லாலும் எழுத்தாலும் அக்காப்பியங்களின் சிறப்பியல்புகளைப் பொதுமக்களும் ஓரளவு உணர்ந்து அவற்றில் ஈடுபடச் செய்து வந்த-செய்து வரும்-சிறப்புடைத் தொண்டர் அனே வரும் தமிழ் நாட்டினர் பாராட்டுக்குரியவராவர்.

அறிஞர் ந.சஞ்சீவியவர்கள் சிலப்பதிகாரத்தைப் பல கோணங்களில் நின்று ஆராய்ந்து கண்ட அரிய கருத்துக்களேச் ' சிலம்புத்தேன் ' என்னும் சிறிய நூல் வாயிலாகயாப்பறி புலவர்க்கு நீப்பரு விருந்தினைச் செய்துள்ளனர். 'நல்விருந்தருந்தி நனி மகிழ வம்மின்' எனக் காப்பியக் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகளை இவ்வணிந்துரை வாயிலாக அழைக்கின்றேன்.

சஞ்சீவியவர்களது செஞ்சொல் முயற்சி நாளும் சிறந்து நாட்டுக்கும் மொழிக்கும் நலம் விளேப்பதாக!

சென்னை 12-5-59
மே. வீ. வே. பிள்ளை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/6&oldid=1355750" இலிருந்து மீள்விக்கப்பட்டது