பக்கம்:சிலம்புத் தேன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

காவிய உலகில் சிலம்புத்தேன் சிலம்புத் தேனே. இவ்வுண்மையை உணர்ந்தே போலும் கவிமணி தேசிக விநாயகர்,

தேனிலே ஊறிய செந்தமிழின்-சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளனவும்- நிதம்
ஓதி உண்ர்ந்தின் புறுவோமே!

என்று கசிந்துருகிப் பாடினார். இவ்வுண்மையை யானும் உணர்ந்து போற்றும் ஒளி நெறியில் உருவாகிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல், இத்தொகுப்பில் உள்ள முதல் கட்டுரை எனது தலைமையில் கொண்டாடப் பெற்ற தானாச் தமிழ்ச் சங்க முதலாண்டு விழா (1958) மலரில் முகிழ்த்தது. இரண்டாவது கட்டுரை புதுவை இராமகிருஷ்ண வாசக சாலையாரின் வெள்ளி விழா (1958) மலரில் விரிந்தது. மூன்றாவது கட்டுரையின் முற்பகுதி சிலம்புச் செல்வர் திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் நடத்தும் 'செங்கோல்' இதழின் 1957-ஆம் ஆண்டு இளங்கோ மலரில் மலர்ந்தது.

'சிலம்புத்தேன்' செந்தமிழர் சிந்தைக்கு விருந்தாகும் இச்சமயத்தில் எனது சிலப்பதிகார ஆர்வத்தை நாளும் வளர்த்து வரும் பெரியோர்கட்கும் நண்பர்கட்கும் என் உளங்கனிந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

'சிலம்புத்தேன்' சிந்தாமணிச் செல்வர் வாழ்த்தோடு வெளி வருவது யான் செய்த பெரும் பேறு. அச்சாகுங் காலத்து இந்நூலைச் செப்பம் செய்து உதவியதோடன்றி, எனது வருங்கால வாழ்வில் பெருங்கருணை கொண்டு இந்நூலுக்கு அரியதோர் அணிந்துரையும் வழங்கி எளியேனே வாழ்த்தியருளியுள்ள மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் மலரடிகளே என்றும் மறவேன்.

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !

வாழ்க சிலம்புத்தேன் !

கச்சியம்பதி 14-5-59
ந. சஞ்சீவி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/7&oldid=1355789" இலிருந்து மீள்விக்கப்பட்டது