பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. சேர மன்னன் புறப்பாடு

செங்குட்டுவன் அரியணையில் வீற்றிருந்தான். இமயமலை சென்று கண்ணகியின் விக்கிரகம் செய்யக் கல்லைக் கொணர வேண்டும் என்று அவன் கருதியதை நிறைவேற்றும் வழி யாது என்பதை, யோசிக்கவே மந்திரிகளும் பிறரும் கூடியிருந்தார்கள். சேரனுடைய குலகுரு ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்லும் பெருங்கணியாகிய சோதிடரும் ஓரிடத்தில் இருந்தார். அமைச்சர்கள் தம் தம் இருக்கையில் இருந்தார்கள். படைத்தலைவர்களும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். யாவரும், “மன்னர்பிரான் வாழ்க! வெல்க!” என்று சொல்லியபடி வந்து அமர்ந்தார்கள்.

அந்த அவையினரை நோக்கிச் செங்குட்டுவன் பேசலானான்; வடநாட்டுக்குச் சென்று இமயத்தை அடைந்து கல் கொணர்ந்து பத்தினித் தெய்வத்தின் திருவுருவை அமைத்து வழிபட வேண்டும் என்னும் ஆவல் நாளுக்கு நாள் என்னிடம் வளர்ந்து வருகிறது. இமயக் கல்லைக் கொணர வேண்டும் என்று நான் கருதுவதற்குச் சிறப்பான காரணம் ஒன்று உண்டு. சில நாட்களுக்கு முன் இமயத்திலிருந்து சில தவ முனிவர்கள் இங்கே வந்தார்கள். அவர்களை உபசரித்து வழிபட்டேன். தமிழ் நாடு முழுவதும் பார்த்த அவர்கள் வஞ்சிமா நகருக்கு வந்து சில நாள் தங்கினார்கள். அவர்களிடம் தமிழ் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் இந்த நாட்டை மிகப்-

சில-4