பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சாரும்? அதனால்தான் இங்கே கங்கையில் நீராட வந்தேன்” என்று மாடலன் கூறி முடித்து அரசனை வாழ்த்தினான்.

செங்குட்டுவன், “பாண்டி நாட்டில் இப்போது யார் அரசாள்கிறார்?” என்று கேட்டான்.

“கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் அரியணை ஏறியிருக்கிறான்” என்றான் மாடலன்.

இப்படி அவ்வந்தணனோடு சேரமான் உரையாடிக் கொண்டிருந்தபோது கதிரவன் மறைந்தான். இரவு வந்தது. வெள்ளிய பிறைவானத்திலே தோன்றியது. அதனுடைய அழகைப் பார்த்துக்கொண்டு வெளியே வந்து நின்றான் அரசன். அந்தச் சமயம் பார்த்து அரசனுடன் வந்திருந்த சோதிடன், “அரசர் பெருமான் வஞ்சிமாநகரை விட்டுப் புறப்பட்டு முப்பத்திரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. வாழ்க நின் கொற்றம்” என்று கூறினான். இனி விரைவில் திரும்பிச் செல்லவேண்டும் என்று அரசனுக்குப் புலப்படுத்துவதற்காகவே அவன் இந்தச் செய்தியைச் சொன்னான்.

அரசன் தன் கூடாரத்தை அடைந்து மாடலனை அழைத்துவரச் சொன்னான். அம் மறையவன் வந்ததும், "காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ மன்னன் நலமாக இருக்கிறானா?” என்று கேட்டான். செங்குட்டுவனுக்கு உறவினன் அவன்.

“சோழன் செங்கோல் திறம்பாது ஆட்சி புரிந்து வருகிறான். அவனுக்குத் தீங்கு ஏதும் இல்லை” என்று விடை கூறினான் மாடலன்.