பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டோம். மதுரை மாநகரம் சென்று பாண்டிய மன்னனைக் கண்டோம். அவன், “தோற்று ஓடினவர்களின்மேல் சீற்றம் கொள்வது முறையன்று ; இது புதுமையாக இருக்கிறது.” என்றான். “இரண்டு மன்னர்களும் இந்த வெற்றிச் செயலைப் பாராட்டாமல் இருந்தது கிடக்கட்டும்; இழித்துக் கூறிவிட்டார்களே !” என்று சென்றவர்களில் தலைவனாகிய நீலன் கூறினான்.

செங்குட்டுவன் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கனகனும் விசயனும் பொதுவாகத் தமிழ் மன்னர் மூவரையுமே இகழ்ந்து பேசினார்கள். அவர்களை அடக்குவது இகழ்ச்சியைப் பெற்ற மூவருக்கும் உரிய கடமை. சேரமன்னன் தமிழ் மன்னர்களின் பிரதிநிதியாகச் சென்று போர்செய்து, இழித்துப் பேசியவர்களை வென்று சிறைப்பிடித்தான். இமயத்தில் கல் கொணர்வதற்காக அவன் போகவேண்டியது அவசியம் அன்று. இழித்துப்பேசிய மன்னர்களுக்கு அறிவூட்டவேண்டும் என்பதுதான் அவனுடைய தலைமையான நோக்கம். இப்படி இருக்க, இந்த அருமையை உணராமல் சோழ மன்னனும் பாண்டியனும் செங்குட்டுவன் செயலைத் தாழ்த்திப் பேசிவிட்டார்கள்.

இந்தச் செய்தியைக் கேட்ட செங்குட்டுவனுக்கு உள்ளம் கொதித்தது; சினம் பொங்கிவந்தது; கண்கள் சிவந்தன.

அப்போது அங்கே அமர்ந்திருந்த மாடலமறையோன் எழுந்திருந்தான்; “மாமன்னருக்கு ஒரு சிறு விண்ணப்பம் செய்துகொள்ள விழைகிறேன்” என்று நயமாகப் பேசினான்.