பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

விற்கச் சென்றதும், கொலையுண்டதும், பிறகு கண்ணகி பாண்டியன்முன் சென்று வழக்கிட்டதும், மதுரைமா நகரத்தை எரித்துவிட்டுப் புறப்பட்டு வந்து மலை நாட்டை அடைந்ததும், வானவிமானத்தில் கோவலனோடு ஏறிச் சென்றதும் ஆகியவற்றைச் சொல்லும் பகுதிக்கு மதுரைக் காண்டம் என்று பெயர் இட்டார். மூன்றாவது வஞ்சிக் காண்டம். அதில் கண்ணகி வான விமானத்தில் சென்றதைக் குறவர்கள் செங்குட்டுவனிடத்தில் வந்து சொன்னது, அவன் கோயில் எடுக்க முடிவு செய்து இமயம் நோக்கிச் சென்றது, வடநாட்டு அரசரோடு பொருது வென்றது, இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கங்கையில் நீர்ப்படை செய்தது, அங்கிருந்து வஞ்சிமாநகர் வந்து பத்தினித் தெய்வத்துக்குக் கடவுள் மங்கலம் செய்து வழிபட்டது முதலிய செய்திகள் அடங்கியிருக்கின்றன.

முதலில் திங்களுக்கும், கதிரவனுக்கும், புகார் நகருக்கும் வாழ்த்துக் கூறிக் காவியத்தைத் தொடங்கினர். இடையிலே, காடு முதலிய இடங்களில் உள்ள மக்கள் தங்கள் தங்கள் கடவுளரை வழிபடுவதாகச் சொல்லி, அந்தக் கடவுளரின் துதிகளை அமைத்தார். இந்த வகையில் வேட்டுவ வரி என்னும் பகுதியில் துர்க்கையின் துதியும், ஆய்ச்சியர் குரவை என்பதில் திருமாலின் தோத்திரமும், குன்றக் குரவையில் முருகனுடைய வாழ்த்தும் வருகின்றன. இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழின் கூறுபாடுகளும் இடையிடையே விரவி வரும்படி அமைத்தார்.

அதனைப் பாடப் பாட இளங்கோவடிகளுக்கு ஊக்கம் பெருகிவந்தது. பாடி முடித்தபோது அவருக்கு