பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

119


திருமணம் நடத்துவதில்லை - தமிழ்ப் பெரியவர் ஒருவரைக் கொண்டே நடத்துவது வழக்கம் என்றனர். 1969-ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குருந்தம்பட்டு என்னும் ஊரில் குமர. ஞானபூரணம் என்பவருக்கு யான் தலைமை தாங்கித் திருமணம் நடத்தி வைத்தேன். அங்கே விசாரித்தபோதும், வழி வழியாகத் தமிழ்ப் பெரியாரைக் கொண்டே திருமணம் நடத்துவது வழக்கம் என்றனர்.

எனவே, சிலப்பதிகாரம் சொல்வது ஒரு சாராரின் வழக்கமாயிருக்கலாம். அனைவரையும் அது கட்டுப்படுத்தாது.

அடுத்து - மேலும் சில: கடைகளில், இன்ன பொருள் இங்கே விற்கும் என்பதை அறிய அறிவிப்புக் கொடிகள் கட்டிவைப்பது உண்டு,

"பொலந்தெரி மாக்கள் கலங்களுர் ஒழித்தாங்கு
இலங்கு கொடிஎடுக்கும் கலங்கிளர் வீதி"
(14:203, 204)

வணிகம் செய்யும் யவனர் முதலிய அயல்நாட்டினர் தமிழகத்தில் நிரம்ப இருந்தனர்.

ஒன்றை வலம் வருபவர்கள் மூன்று முறை வலம் வருவது அக்காலத்தும் உண்டு, செங்குட்டுவன் கண்ணகிக் கோட்டத்தை மும்முறை வலம் வந்தானாம்.

"வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவன் கின்றோன் முன்னர்"
(30:155, 156)

ஆடவர் கோவேறு கழுதைமேல் ஊர்ந்து செல்லும் பழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. கோவலன் இதன்மேல் ஊர்ந்து கடற்கரைக்குச் சென்றதாகக் கடலாடு காதையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"வான வண்கையன் அந்திரி ஏற" (6:119)