பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

183


காதையின் இறுதியில் பாண்டியனை வாழ்த்துகிறாள். இந்திரன் முடிமேல் வளை எறிந்த மரபில் வந்த பாண்டியனது முரசம், எப்போதும் பாண்டியனுக்கு வெற்றி முரசமாகவே முழங்குவதாகுக என்னும் கருத்தில் வாழ்த்து அமைத்து வாழ்த்தினாள். பாடல்:

"வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த
தொடித்தோள் தென்னவன் கடிப்பிகு முரசே"

இது பாடல் பகுதி. மாதவியின் வாழ்த்து பாண்டியன் இறந்ததை அறியா முன்னம் நிகழ்ந்தது.

வாயிலோன்

வழக்கு உரைக்கக் கண்ணகி வந்திருப்பதைப் பாண்டியனுக்கு அறிவிக்கச் சென்ற வாயில் காவலன் பெரிய அளவில் பாண்டியனை வாழ்த்தியுள்ளான்.

"வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி" (20:30-33)

என்பது வாயிலோனது வாழ்த்து. இந்தப் பகுதியில் ஆறு வாழிகள் உள்ளன. என்ன பயன்? இன்னும் சிறிது நேரத்தில் பாண்டியன் இறக்கப் போகின்றானே. மற்றும், "பழியொடு படராப் பஞ்சவ" என்று விளித்துள்ளான். இன்னும் சிறிது நேரத்தில் பழி படரப் போகிறதே.

இங்கே படர்தல் (படரா) என்னும் சொல்லை உற்று நோக்கவேண்டும். மர இனமாகிய மரம் செடி கொடி புல் பூண்டு என்பனவற்றுள் கொடி தவிர்த்த மற்ற நான்கும் ஒரே இடத்தில் நிற்கும். கொடி மட்டும் நெடுகிலும் படரும் - அதாவது - பரவும் - பாண்டியனது பழியும் படர்ந்து இன்று வரையும் நினைக்கப் படுகின்றதல்லவா?