பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

சுந்தர் சண்முகனார்


சொல்லியிருப்பாரா? துறவி பசி தாகத்தைத் தாங்க முடியும் போலும்!

இங்கே இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில், கம்பராமாயணம் - ஆரணிய காண்ட ம் - அயோமுகிப் படலத்தில் உள்ள ஒரு செய்தி காண்போம்.

நீர் கொணரச் சென்ற கோவலனை ஒரு தெய்வம் காதலித்தது போலவே, காட்டில் இராமனுக்காக நீர் கொணரச் சென்ற இலக்குவனை வழியில் அயோமுகி என்பவள் காதலித்தாளாம். நீர் கொணரப்போன இடத்தில் காதலிக்கப்பட்டமை, இரண்டு காப்பியத்திலும் உள்ள பொதுச் செய்தியாகும்.

மாதவியின் மடல்கட்கு மயங்காமை:

மாதவி கோவலனுக்கு இரண்டு மடல்கள் அனுப்பினாள். அவன் ஒன்றுக்கும் மயங்கவில்லை. முதலாவது:- கோவலன் கானல் வரி பாடி மனமாற்றம் ஏற்பட மாதவியை விட்டுப் பிரிந்து வந்து விட்டான் அல்லவா? அவன் திரும்பவும் வர வேண்டும் என வேண்டி மாதவி வயந்தமாலை வாயிலாக ஒரு மடல் அனுப்பினாள். மடல் உருவாக்கப்பட்ட விதம் வியப்பானது. அணிந்திருந்த மாலையில் இருந்த தாழை மடலை எடுத்து விரித்து, பித்திகைப் பூவின் நுனியை எழுத்தாணியாகக் கொண்டு, செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து எழுதினாள். என்ன என்று எழுதினாள்: இள வேனில் என்னும் இளவரசனும் திங்களாகிய செல்வனும் மன்மதனும் செய்யும் கொடுமைகள் வியப்பில்லை - வெளிப்படை. அன்பு கூர்ந்து வந்தருளுக - என்றெல்லாம் மழலை மொழி பல அமைத்து எழுதி வயந்தமாலையிடம் தந்து, மடலின் உட்பொருளை நன்கு அவருக்கு எடுத்துக் கூறி அழைத்து வருக என்று ஏவினாள். வயந்தமாலை கூல மறுகில் கோவலனைக் கண்டு இன்மொழி கூறி ஈய முயன்றாள். ஆடல் மகள் ஆதலின் இதுவும் செய்வாள் -