பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

223


மறந்து இன்பத்தில் திளைத்தனர். அப்போது கோவலன் தீராக் காதலோடு கண்ணகியின் திருமுகத்தை நோக்கிப் பலவாறு நலம் பாராட்டினான்:

“கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்... (11)
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து (25)
கதிர் ஒருங்கிருந்த காட்சி போல... (31)
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் (35)
தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் (36)

கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை” (37)

என்பன பாடல் பகுதிகள், கயமலர்க் கண்ணி = மலர் போன்ற கண்ணுடைய கண்ணகி. காதல் கணவன் = கண்ணகிபால் மிக்க காதலையுடைய கோவலன். காப்பியத் தொடக்கமாகிய மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் பகுதியில் முதலில் “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்றும், இரண்டாவதாக “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்றும் ஆசிரியர் கூறியுள்ளார். அதே பகுதியில், கண்ணகியை முதலில் அறிமுகப்படுத்திப் பின்னரே கோவலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதில் இயற்கையான ஒரு பொருத்தம் உள்ளது. மென்மையான ஒளியுடைய திங்களும் வன்மையான ஒளியுடைய ஞாயிறும் முன் பின்னாகக் கூறப்பட்டிருப்பது போலவே, கண்ணகியின் அறிமுகமும் கோவலனின் அறிமுகமும் முறையே முன் பின்னாகக் கூறப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப, மனையறம் படுத்த காதையிலும், “கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்” (11) எனக் கண்ணகியும் கோவலனும் முறையே முன் பின்னாகக் கூறப்பட்டிருப்பது கருதத்தக்கது. மற்றும், “கதிர் ஒருங்கிருந்த காட்சி போல” (31) என்னும் இல்பொருள் உவமையும் எண்ணத்தக்கது.