பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

சுந்தர சண்முகனார்


கண்ணகி, எண்சாண் உடம்பும் ஒரு சாண் உடம்பாயிற்று என்பார்களே - அதுபோல - கண்ணகி கணவனின் பெரிய முதுகின் பின்னே ஒடுங்கியிருந்தாள். அரியனாகிப் பிரிந்திருந்த கணவனை இப்போது பெற்றிருப்பதால் ‘அரும் பெறல் கணவன்’ என்றார் ஆசிரியர். விருந்து என்றால் புதுமை, மூரல் = புன்னகை. பல்லாண்டுகளாகச் சிரித்தறியாதவளாதலின், இப்போது வெளிக்காட்டிய முரலை ‘விருந்தின் மூரல்’ என்றார். ‘பெண் சிரித்தால் போயிற்று - புகையிலை விரித்தால் போயிற்று’ என்னும் அந்தக் காலப் பழமொழிப்படி, புன் முறுவல் பூத்ததாகச் சொல்லவில்லை - மொக்குப்போல் அரும்பியதாகவே கூறியுள்ளார் இளங்கோ. நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு பெண்கட்கு வேண்டும் என்றது கண்ணகி போன்றோரைக் கருதியே போலும்.

பொற்புடைத் தெய்வம்

கவுந்தியடிகள் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப்படுத்திய போது, பின்வருமாறு கண்ணகியைப் புகழ்ந்து அறிமுகப்படுத்தினாள்.

இந்தப் பெண்ணின் காலடியை மண்மகள் அறியாள். அத்தகையவள் கடுமையான ஞாயிற்றின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு, காதலனுக்காகப் பல இன்னல்களை ஏற்று, நாக்கு நீரின்றி வறள வாட்டமுற்றுப் பரல் நிறைந்த தரையில் நடந்து வந்தாள். தனது துன்பத்தைப் பொருட்படுத்தாது, பூங்கொடி போன்ற இவள் கணவனின் நன்மைக்காக வதங்கிச் செயல்படுகின்றாள். மகளிர்க்கு இருக்கவேண்டிய கற்புக்கடமை நிரம்பப் பெற்ற தெய்வ மகளாவாள். பொலிவுடைய இந்தத் தெய்வத்தைத் தவிர வேறு தெய்வத்தை யாங்கள் கண்டதில்லை - என்று பாராட்டி அறிமுகம் செய்தாள். பாடல் - அடைக்கலக் காதை: