பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

251


அல்லது - கண்ணகியின் பெற்றோர்கள், தெரியாமல் அந்தத் தேவடியாள் தோழனாகிய கோவலனுக்கு நம் பெண்ணைக் கட்டிக் கொடுத்து விட்டோமோ - நம் பெண் அங்கே இருந்து கொண்டு சீரழிவது போதும் - நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துவிடுவோம் - என்று எண்ணிக் கண்ணகியைத் தம் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டிருக்கலாம். அல்லது - கண்ணகி, நான் என் அம்மா வீட்டிற்குப் போகப் போகிறேன் என்று சொல்வித் தானாகவே தாய் வீட்டிற்குப் போயிருக்கலாம் - உள்ளூர்தானே!

ஆனால் இப்படியெல்லாம் எதுவும் நடவாதபடி அனைவரும் பெருந்தன்மையோடும் உயரிய பண்போடும் நடந்து கொண்டிருக்கிறார்கள். கோவலனின் பெற்றோர்கள் தம் மகளைப் போலவே கண்ணகியை நடத்தியிருக்கிறார்கள். கண்ணகியும் அவர்கள் முன்னே தன் வருத்தம் தெரியாத படிப் பொய்யாகச் சிரித்துள்ளாள். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்”, “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” (குறள் - 706) என்ற படி அவளது சிரிப்பு அவளது துன்பத்தை வெளிப்படுத்தி விட்டது. கண்ணகியைப் பாராட்டி வந்த அவர்கள் அவளது பொய்ச் சிரிப்பின் பொருளைப் புரிந்து கொண்டு மனம் வருந்தினார்களாம். மேல் மனம் வருந்தினால் அவள் தெரிந்து கொள்வாள் என்பதற்காக, அவர்களும், மேலுக்கு இயற்கையாயிருப்பது போல் காட்டி உள்மனம் (Inner mind) வருந்தினார்களாம். ‘உள்ளகம் வருந்த’ என்னும் பகுதி ஈண்டு எண்ணத்தக்கது.

துன்பமான நேரத்தில் கண்ணகி பொய்ச் சிரிப்பு சிரித்தாளே - இதுதான், ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என வள்ளுவர் பரிந்துரைத்துள்ள நகைப்பாயிருக்குமோ!