பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

267


மாதரியின் மனத்தைக் கவரக் கவுந்தி மேலும் கூறுகிறார்: கண்ணகியை நீராட்டிப் பொட்டிட்டுப் பூச்சூட்டித் தூய உடை உடுத்து, ஆயமும் காவலும் தாயும் இவளுக்கு நீயேயாகிக் காப்பாற்றுக. காலடி மண்ணில் பட்டறியாத கண்ணகி கணவனின் நன்மைக்காக மிகவும் வருந்தி வழி கடந்து வந்துள்ளாள். கற்புடைய இத்தெய்வம் அல்லது வேறு தெய்வம் நாங்கள் கண்டதில்லை. இத்தகைய பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் - வளம் குறையாமல் கொழிக்கும். அரசனுடைய வெற்றியும் செங்கோலும் தவறுவதில்லை - என்பதை மாதரியே நீ அறியாயோ - என்றார்.

“கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்கில வேந்தர் கொற்றம் சிதையாது

பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு” (143-147)

என்பது பாடல் பகுதி. பத்தினிப் பெண்டிர் இருக்கும் நாட்டில் மழை தவறாது பெய்யும் - வளம் பெருகும் என்பது அறிவியலின்படி ஒத்துக் கொள்ள முடியாதது. கவுந்தி மாதரியின் மனங்கவர உயர்வு நவிற்சியாக இதைச் சொல்லி யிருக்கலாமல்லவா? இதனை, “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என வள்ளுவர் கூறியிருப்பது போல் கொள்ளலாம். உரை பெறு கட்டுரையிலும் இவ்வாறு மழை பெய்ததாகக் கூறப்பட்டுள்ளது வியப்பாயுள்ளது.

மேலும் கவுந்தி தொடர்கிறார். மாதரியே! அடைக்கலமாக வந்தவரைக் காப்பதால் கிடைக்கும் பயனை விளக்க ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்: காவிரி சார்ந்த பட்டினத்துப் பொழில் ஒன்றில் சாரணர் சாவகர்க்கு அறம் உரைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்தே,