பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

சுந்தர சண்முகனார்


குறிக்கும். இப்பெயர் நாளடைவில் பரத்தமைத் தொழில் செய்பவரைக் குறிக்கலாயிற்று. எனக்குத் தெரிந்த ஓர் ஊர்க்கோயிலில் பூசனை நடைபெறும்போது நாள் தோறும் தேவடியார் பெண் ஒருவர் வந்து பாடுவார். விழாக் காலங்களில் தேவடியார் பெண் ஒருவர், ஒப்பனை செய்யப் பெற்ற கடவுள் திருமேனி முன் ஒருவகை இசைக் கருவியுடன் நடனம் ஆடுவார். இது இப்போது நடை பெறவில்லை. (ஊர்ப்பெயர் தேவையில்லை.)

அந்த ஊரில் கோயிலில் பாடுபவரும் ஆடுபவரும் இருக்கும் தெருவிற்குத் தேவடியார் தெரு என்பது பெயர். அங்கே நடந்தது இந்தத் தொழிலே. இப்போது இல்லை. பரத்தமைத் தொழில் செய்து வந்த குடும்பங்களுள் பெரும்பாலான குடும்பத்தினர், இப்போது திருந்தி நல்ல கற்புடைய குடும்பத்தினராக மாறியுள்ளனர். மாதவியின் மாற்றமும் இது போன்றதே.

யான் (சு.ச.) ‘தேடக் கிடைக்காத செல்வம்’ என்னும் பெயரில் ஒரு கதை எழுதினேன். அது அச்சிட்டு வெளி வந்துள்ளது. கதைச் சுருக்கம்:- சித்திராதேவி என்னும் பரத்தை தன் மகள் கோதையைப் பரத்தமைத் தொழிலில் ஈடுபட வற்புறுத்தினாள். கோதை உடன்படவில்லை. தாயின் தொல்லை தாங்க முடியாமையால், முதலில் உடலுறவு கொள்பவரையே கணவராக வரித்துக் கொள்வது என்ற முடிவுடன் ஈடுபட்டாள். கோதையை முதலில் சுவைத்தவர் சேதுநாதன் என்னும் செல்வர். கோதை கருவுற்றாள். கோதையை மணந்து கொள்வதாகச் சொல்லியிருந்த சேதுநாதன் அவளை மணக்காமல் ஏமாற்றி விட்டார். கோதைக்குக் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் கலா. மீண்டும் பரத்தமைத் தொழில் செய்யுமாறு கோதையைத் தாய் வற்புறுத்தினாள். அதற்கு உடன்படாத கோதை, குழந்தை கலாவை விட்டுவிட்டுத்