பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

307



எழுந்தபோது மாடலன் அவனை அமைதியுறச் செய்தான். செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை முதலியவற்றைச் சேரனுக்கு அறிவித்து இனிப் போர் புரியாமல், நன்னெறி செலுத்தும் வேள்வி புரியத் தூண்டினான்.

தெய்வம் ஏறிய தேவந்தி தந்த நீரை மாடலன் சிறுமியர் மூவரின் மீது தெளித்தான். அவர்களின் பழம் பிறப்பு அறியப்பட்டது. இருவர் கோவலனின் தாயும் கண்ணகியின் தாயுமாவர்; மூன்றாமவள் மாதரியாவாள். இம்மூவரின் விவரங்களை மாடலன் சேரனுக்கு அறிவித்தான். பின்னர்ச் சேரன் மாடலனுடன் வேள்விச் சாலையை அடைந்தான்.

மாடலன் ஆற்றிய பல்வேறு பணிகளை எண்ணுங்கால், சேக்சுபியர் As you like it ('நீ விரும்பிய வண்ணமே') என்னும் நாடகத்தில் அறிவித்துள்ள ஒரு கருத்து நினைவைத் தூண்டுகிறது. அது:

"All the World’s a stage
And All men and women are merely players
They have their exits and their entrances
One man in his time plays many parts"

இந்த உலகம் முழுவதும் ஒரு நாடக மேடை அனைத்து ஆண்களும், பெண்களும் வெற்று (வெறும்) நடிகர்கள். அவர்கள் மேடையினின்றும் போதலும்(சாதலும்) மேடைக்கு வருதலும் (பிறத்தலும்) உடையவர்கள். ஒருவன் அவனது வாழ்நாளில் பல பாகங்களில் நடிக்கிறான் - என்பது இதன் கருத்து.

ஒருவன் பல பாகங்களில் நடிக்கிறான் என்பதற்கு ஏற்ப, மாடலன் சிலம்பில் பல்வேறு பணிகள் புரிந்துள்ளான்.