பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

353


போய் விட்டதனால்தான் அவன் ஊடல் தணிக்கும் விரைவு நோக்கத்துடன் அந்தப்புரம் நோக்கிச் சென்றான். வழியில் பொற்கொல்லன் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டான். இதை அரசியும் ஆழ உணர்ந்திருப்பாள் அல்லவா? அதன் விளைவு உயிர் இழப்பு.

பொற்கொல்லன் கூறியதும், அரசன் தேவியின் ஊடலைப் பின்பு தீர்த்துக் கொள்ளலாம்; முதலில் களவுக் குற்றத்தைக் கவனிப்போம் என்று எண்ணி அமைச்சருடன் சூழ்வு (ஆலோசனை) செய்து நீதி வழங்கியிருக்கலாம். அரசன் அவ்வாறு செய்யாமல் தேவியின் ஊடல் தீர்ப்புக்கு முதன்மை கொடுத்ததற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம். இதை இளங்கோ அடிகள் இயம்ப மறந்துவிட்டார் போலும்! அதாவது:- காணாது போன சிலம்பை அரசன் இன்னும் கண்டுபிடித்துத் தரவில்லையே என்ற குறையும் அரசியின் ஊடல் காரணங்களுள் ஒன்றாயிருக்கலாம். எனவே, களவுபோன சிலம்பை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என அரசன் அதற்கு முதன்மை கொடுத்திருக்கக் கூடும். காகம் அமரவும் பனம் பழம் விழவும் சரியாயிருந்தது (காகதாலி நியாயம்) என்பதுபோல, அந்த நேரத்தில் பொற்கொல்லன் வந்து கள்வன் கிடைத்துவிட்டான் என்று கூற, அங்ஙன மாயின், அரச முறைப்படிக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வரும்படி அரசன் ஆட்களை ஏவியிருக்கலாம் அல்லவா?

கொலைக் குற்றத்திற்கு இறப்பு ஒறுப்பு தரப்படும். கோவலனைக் கொன்றவர்களாகிய - அதாவது கொல்லக் காரணமா யிருந்தவர்களாகிய அரசனும் அரசியும் தங்களுக்குத் தாங்களே இறப்பு ஒறுப்பு கொடுத்துக் கொண்டு பாண்டியர்களின் புகழுக்குப் புத்தொளி அளித்து உள்ளனர்.