பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

சுந்தர சண்முகனார்


சுவையுணர்வைப் படிப்பவர்க்கு ஊட்டுவதற்காக இளங்கோ தொடர்ந்து எழுதிக் காட்டினார். இவ்வாறு எழுதாமல் “மாலையில் உணவு கொண்டு, இரவில் படுத்து உறங்கினர். மறு நாள் காலையில் கோவலன் சிலம்பு விற்கப் புறப்பட்டான் என்று எழுதின் காப்பியச் சுவை கெட்டுவிடும்; அவலச் சுவையின் விருவிருப்பு மழுங்கி விடும். எனவேதான் அடிகள் இவ்வாறு எழுதினார்.

நாடகக் கூறு

மற்றும், இவ்வாறு எழுதுவது ஒருவகை நாடகக் கூறு என்பதும் நினைவிருக்க வேண்டும். அதாவது:- திரை ஓவியத்தில் (சினிமாப் படத்தில்) இதைக் காணலாம். காட்சியின் நடுவில், முன்பு தொடக்கத்தில் நிகழ்ந்ததைக் கொண்டு வந்து காண்பிப்பர். இடையில் புகுத்தப்படும் இந்தத் தொடக்க நிகழ்ச்சி, நினைவுக் காட்சியாகவோ அல்லது முன்பு நடந்ததைப் பிறர்க்கு அறிவிக்கும் காட்சியாகவோ காண்பிக்கப்படும். மற்றும், பின்னால் நடக்கப் போவதைக் கனவுக் காட்சியாக முன்னாலேயே காண்பிப்பதும் உண்டு. இந்த மரபின் அடிப்படையில், நாடகக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு வருவோம்:- காலைக்கும் மாலைக்கும் இடையில் கொலை நடந்ததாகப் பத்தொன்பதாவது காதையாகிய ஊர்சூழ் வரியில் குறிப்பிட்டதை, முன்னாலேயே - பதினாறாவது காதையாகிய கொலைக்களக் காதையிலேயே குறிப்பிட்டு விட்டார். கனவுக் காட்சியில் பின்னால் நடக்க இருப்பதை முன்னாலேயே காண்பிப்பது போல, மறுநாள் நடக்கப்போகும் நிகழ்ச்சியை, முதல் நாள் மாலை நிகழ்ச்சியோடு தொடர்ந்து சொல்லி விட்டார். எனவே, இந்த அமைப்பை, ஆண்டு - திங்கள் - நாள் (கிழமை) - மணி நேரம் குறிப்பிட்டு எழுதும் வரலாறு போல் (நாட் குறிப்புப்போல்) கருதாமல், நாடகக் காப்பியம் என்ற நினைவோடு அமையவேண்டும்.